சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கோவிட்-19 பெருந்தொற்று, தற்போது உலகெங்கிலும் பரவி, சர்வ நாசத்தை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக, மற்ற நாடுகளைக் காட்டிலும் அமெரிக்கா, ரஷ்யா, பிரேசிலில் பாதிப்பு எண்ணிக்கை அபரிவிதமாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, லேசான அறிகுறிகளுடன் உள்ள நோயாளிகளுக்கு குளோரோகுயின் மாத்திரையைப் பயன்படுத்துமாறு பிரேசில் அதிபர் போல்சோனாரோ அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய பிரேசில் அதிபர், "அந்த மருந்தைப் பயன்படுத்திய பலர் உடல்நலத்தில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வருவதாக நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்" என்றார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் ஹைடிராக்சி குளோரோகுயின் மருந்தை உட்கொண்டு வருவதாக வெளிப்படையாகத் தெரிவித்திருந்ததை அடுத்து, போல்சோனாரோ இவ்வாறு கூறியுள்ளார்.
பிரேசில் அதிபர் போல்சோனாரோ சொன்னதைப் போன்று, லேசான அறிகுறிகளுடன் உள்ள கோவிட்-19 நோயாளிகளுக்கு ஹைடிராக்சிகுளோரோகுயின் அல்லது குளோரோகுயின் மருந்துகளைப் பயன்படுத்துமாறு அந்நாட்டு சுகாதாரத் துறை வழிகாட்டல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.