அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில், ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கரை காவலர் ஒருவர் சுமார் எட்டு நிமிடம் 56 நொடிகள் choke hold எனப்படும் கோரப் பிடியில் வைத்திருந்தார். தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று பலமுறை கதறியும், காவலர் தனது பிடியைth தளர்த்தாததால் ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்துவருகின்றன.
இந்நிலையில், பென்சில்வேனியா மாகாணத்தில் எரியும் காரிலிருந்து வெள்ளையினக் காவலர் ஒருவரை ஆப்பிரிக்க அமெரிக்கர் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 46 வயதான டேலன் மெக்லீ, பென்சில்வேனியாவிலுள்ள யுனிடவுன் பகுதியிலுள்ள தனது வீட்டிலிருந்தபோது அவரது உறவினர் வந்து, காவல் துறையினர் கார் ஒன்று விபத்தில் சிக்கியிருப்பதாகக் கூறியிருக்கிறார்.
அதைக் கேட்டதும் நொடியும் தாமதிக்காத டேலன் மெக்லீ, உடனடியாக கார் கதவை உடைத்து, உள்ளே இருந்த காவலரைக் காப்பாற்றியுள்ளார். டேலன் மெக்லீ காவலரைக் காப்பற்றிய சிறிது நேரத்திலேயே கார் முழுவதுமாகத் தீ பரவியது. டேலன் மெக்லீயின் சரியான நடவடிக்கையால் சிறிய காயங்களுடன் அந்தக் காவலர் உயிர் தப்பியுள்ளார்.