பிகார் மாநிலத்தை சேர்ந்த 13 வயதான சிறுமி ஜோதி, விபத்தில் காயமடைந்த தனது தந்தையைச் சொந்த ஊருக்கு சைக்கிளிலே அழைத்துச் சென்ற நிகழ்வு இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஏழு நாள்களில் சுமார் 1,200 கிமீ பயணம் மேற்கொண்ட சிறுமியின் பாசம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இத்தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்பின் காதுகளுக்கும் எட்டியுள்ளது.
இச்செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், "13 வயதான ஜோதி குமாரி, காயமடைந்த தனது தந்தையை சைக்கிளின் பின்புறத்தில் அமரவைத்து 7 நாள்களில் 1,200 கிமீ தூரம் பயணித்து, சொந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். சிறுமியின் தந்தை மீதான அன்பும், இன்னல்களைத் தாங்கும் அவரின் வலிமையும் ஒட்டுமொத்த இந்திய மக்களையும், சைக்கிள் பெடரேஷனையும் கவர்ந்துள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.