அமெரிக்காவின் புதிய அதிபராக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் தேர்வாகியுள்ளார். நவம்பர் 3ஆம் தேதி நடந்துமுடிந்த அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்பை தோற்கடித்த இவர் வரும் ஜனவரி மாதத்தில் புதிய அதிபராகப் பொறுப்பேற்க உள்ளார்.
தனது தேர்தல் தோல்வியை அதிபர் ட்ரம்ப் ஒத்துக்கொள்ளாமல் அடம் பிடித்துவரும் நிலையில் அந்நாட்டில் கரோனா இரண்டாம் கட்ட அலை கடும் தீவிரமாகப் பரவிவருகிறது. நோய்த் தொற்றைத் தடுக்க முடியாமல் அமெரிக்கா திணறிவரும் நிலையில் புதிதாகப் பொறுப்பேற்க உள்ள பைடன் நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகளைத் தொடங்க தயாராகிவருகிறார்.
வரும் வாரத்தில் தனது புதிய அமைச்சரவையை ஜோ பைடன் தேர்வுசெய்ய உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. பைடனின் முக்கிய நிர்வாகியான ரான் கிளன் இதை உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும் அமைச்சரவையின் விவரங்கள் குறித்து தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
முதற்கட்டமாக உள் துறை, பாதுகாப்புத் துறை, நிதித் துறை உள்ளிட்டவற்றுக்கு அமைச்சர்களை பைடன் தேர்வுசெய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராக பெண் ஒருவர் முதன்முறையாகத் தேர்வுசெய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரோனா பரவல் தீவிரமாக உள்ள நிலையில் விழாவை எவ்வாறு பாதுகாப்பாக நடத்துவது என ஜனநாயகக் கட்சியினர் தீவிரமாக ஆலோசித்துவருகின்றனர்.