தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அரசியல்வாதி அதிபரான கதை! - ஜோ பைடன் வரலாறு

அமெரிக்க தேர்தல் பரப்புரை விறுவிறுப்பாக நடைபெற்றபோது, ஜோ பைடன் போன்று ட்ரம்ப் கைதேர்ந்த அரசியல்வாதி அல்ல என மெலனியா ட்ரம்ப் கூறினார். ஆம், அவரின் கருத்து மிகச் சரி. பழுத்த அரசியல்வாதியான பைடன் மிக இளம் வயதிலேயே செனட் சபைக்கு தேர்வு செய்யப்பட்டவர். 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் உள்ள நேர்த்தியான அரசியல்வாதி தற்போது வெள்ளை மாளிகையை அலங்கரிக்கவுள்ளார்.

ஜோ பிடன்
ஜோ பிடன்

By

Published : Nov 8, 2020, 6:46 AM IST

Updated : Jan 20, 2021, 3:39 PM IST

அரை நூற்றாண்டுகால பொது வாழ்க்கைக்கு சொந்தகாரரான ஜோ பைடன் தனது வாழ்க்கையில் பல வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்துள்ளார். The icing on the cake என்ற பழமொழிக்கு ஏற்ப இறுதியில் அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பை தோற்கடித்து வெற்றி கண்டுள்ளார்.

30 வயதில் செனட் சபை உறுப்பினர்

டெலாவேர் மாகாண உள்ளூர் அரசியலில் பிரபலமாக இருந்த ஜோ பைடன், 1972 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குடியரசு கட்சியின் மூத்த தலைவரை தோற்கடித்து 30 வயதில் செனட் சபை உறுப்பினரானார். துரதிர்ஷ்டவசமாக, தேர்தலில் வெற்றி பெற்று சில வாரங்களிலேயே அவரின் மனைவியும் மகளும் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த தன் மகன்களான பியூ, ஹன்டர் ஆகியோரை பார்த்துகொள்ள தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்தார். இருப்பினும், சிலரின் அறிவுறுத்தலால் அரசியலில் தொடர்ந்த அவர், 1973 ஆம் ஆண்டு, ஜனவரி 5 ஆம் தேதி செனட் சபை உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார். 2008 ஆம் ஆண்டு வரை, நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக தொடர்ந்தார்.

ஜோ பைடன்

கருப்பினத்தவருக்கு எதிரானவரா பைடன்?

ஜோ பைடன்

கடந்த, 1970களில், கருப்பின குழந்தைகளை வெள்ளையினத்தவர் படிக்கும் பள்ளிகளில் சேர்க்க 'busing' என்ற திட்டத்தை அரசு வகுத்தது. இதன்மூலம், கருப்பின குழந்தைகள் வெள்ளையின குழந்தைகளுடன் சேர்ந்து படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இந்த திட்டத்தை பைடன் கடுமையாக எதிர்த்தார்.

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் போட்டியில் செனட் சபை உறுப்பினரான கமலா, இந்த விவகாரத்தை முன்வைத்து கடுமையாக தாக்கி பேசினார். இருந்த போதிலும், கமலா ஹாரிஸை தனது துணை அதிபர் வேட்பாளராக பைடன் அறிவித்தார்.

அதிபர் தேர்தலில் தோல்வி

1987ஆம் ஆண்டு, நாற்பது வயதை எட்டியிருந்த துடிப்பான பைடன் முதல் முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட முனைப்பு காட்டினார். தொடக்கத்தில் பலர் அவரை வரவேற்றிருந்தாலும் மிக மோசமான வகையில் வேட்பாளர் தேர்விலேயே தோல்வியை தழுவினார். பரப்புரைகளின் போது, மற்றவர்களின் கருத்தை அவர் திருடி பேசுவதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

பெண்களும் சட்டமும்

ஜோ பைடன்

1991 ஆம் ஆண்டு, செனட் நீதி ஆணையத்தின் தலைவராக பைடன் இருந்த போது, நீதிபதி கிளாரன்ஸ் தாமஸ் மீது சட்டத்துறை பேராசிரியர் அனிதா ஹில் என்பவர் பாலியல் புகார் அளித்தார். இதுகுறித்த வழக்கு விசாரணையை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தார் பைடன். விசாரணையின் போது, வெள்ளையின ஆண்களால் நிறைந்திருந்த நீதிக்குழு அனிதாவிடம் கடுமையாக நடந்துக் கொண்டு பல அறுவருக்க தக்க கேள்விகளை எழுப்பினர். இது பலரால் விமர்சிக்கப்பட்டது.

பின்னர், இச்சம்பவத்திற்காக பைடன் மன்னிப்பு கோரினார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, பெண்களுக்கு எதிரான வன்முறைச் சட்டத்தை கொண்டு வந்தார். சட்டத்துறையில் தன்னுடைய மிகச் சிறந்த சாதனையாக அதனை அவர்கருதுகிறார்.

குற்றங்கள் அதிகரிக்க காரணமான சட்டம்

ஜோ பைடன்

நீதித்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் விதமாக கொண்டு வரப்பட்ட ஒரு குற்றச் சட்டம் மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அந்த சட்டத்தை கொண்டு வந்ததில் மிக முக்கிய பங்காற்றியவர் பைடன்.

அமெரிக்காவில் குற்றச் செயல்கள் அதிகரித்திருந்த போது, பில் கிளிண்டன் தலைமையிலான அரசு எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணைந்து கடும் சட்டத்தை கொண்டு வந்தது. 1994 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அந்த குற்றச் சட்டத்தினால், அமெரிக்காவின் சிறைகளில் சிறைவாசிகள் அதிகரித்தனர். குறிப்பாக, ஆப்பிரிக்கஅமெரிக்கர்கள் சிறைவாசிகள் ஆனார்கள். கிராக் எனப்படும் போதை பொருளை பயன்படுத்துவர்கள் மீது கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டது. அதனை ஏழை மக்கள் அதிகமாக பயன்படுத்தினர். ட்ரம்ப்புடனான இறுதி விவாதத்தில், இந்த விவகாரத்தில் தான் செய்தது தவறு என பைடன் ஒப்புக் கொண்டார்.

ஈராக் போர்

வெளியுறவு விவகார ஆணையம் நடத்திய விசாரணையில், சதாம் உசேன் அதிக எண்ணிக்கையில் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக பலர் தவறான கருத்துகளை தெரிவித்தனர். இதனால், 2002 ஆம் ஆண்டு அந்த ஆணையத்தின் தலைவராக இருந்த பைடன், ஈராக் போருக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்தார். பின்னர், இதிலும் தான் தவறான முடிவை எடுத்ததாக அவர் ஒப்புக் கொண்டார்.

ஒபாமாவின் நம்பர் 2

ஜோ பைடன்

உலகமே பொருளாதார மந்த நிலையில் சிக்கி தவித்தபோது, பைடனை தனது துணை அதிபர் வேட்பாளராக ஒபாமா தேர்ந்தெடுத்தார். தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 2009ஆம் ஆண்டு பைடன் துணை அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். சிறப்பாக செயல்பட்ட பைடன், 800 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான திட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற்றார். இந்த பொறுப்பை ஒபாமா அவருக்கு வழங்கியிருந்தார். இந்த திட்டத்தின் வெற்றி காரணமாக, அமெரிக்க பொருளாதாரம் மீண்டது.

கடந்த, 2016 ஆம் ஆண்டு, பைடனின் மூத்த மகன் மூளை புற்றுநோயால் உயிரிழந்தார். இதன் காரணமாக, அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் பைடன் போட்டியிட முடியாமல் போனது.

வெள்ளை மாளிகையை கைப்பற்றிய பைடன்

கடந்த 2019 ஆம் ஆண்டு, ட்ரம்ப்பை தோற்கடிக்க பைடன் தனது பரப்புரையை தொடங்கினார். ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் ஆதரவால், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்வில் பைடன் வெற்றி பெற்றார். இறுதியில், கரோனாவுக்கு மத்தியில் யாரும் கண்டிராத பரப்புரையை மேற்கொண்டு ட்ரம்ப்பை வீழ்த்தியுள்ளார்.

Last Updated : Jan 20, 2021, 3:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details