அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இஸ்ரேல் பிரதமர் நஃப்டாலி பென்னட் வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் சந்திக்கவுள்ளார்.
இதை வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் ஜென் பெஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக ஜோ பைடனும், இஸ்ரேல் பிரதமராக பென்னட்டும் பொறுப்பேற்ற பின் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதல் சந்திப்பு இதுவாகும்.
இருவர் சந்திப்பின் முக்கியத்துவம்
இந்தச் சந்திப்பின்போது பிராந்திய, சர்வதேச பாதுகாப்பு முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. குறிப்பாக, ஈரான் மற்றும் பாலிஸ்தீன நாடுகளின் உறவு குறித்து பேசப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இந்த ஆண்டுதான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கத் தேர்தலில் டொனால்டு ட்ரம்பை வீழ்த்தி ஜோ பைடன் ஆட்சியைப் பிடித்த நிலையில், இஸ்ரேலில் பென்ஜமின் நெதன்யாகு தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பை இழந்து, பென்னட் தலைமையில் புதிய கூட்டணி அரசு அமைந்துள்ளது.
இரு நாட்டிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் இதன் தாக்கம் வெளியுறவுக் கொள்கையில் நிச்சயம் பிரதிபலிக்கும். எனவே, இந்த இரு தலைவர்களின் முதல் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மேலும், கோவிட்-19 பரவல் காரணமாக இஸ்ரேல் பிரதமர் அமெரிக்காவில் இரண்டு நாள்கள் தான் தங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பண மூட்டைகளுடன் தப்பி சென்றேனா? அஷ்ரப் கானி ஆதங்கம்