அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில், இரு கட்சிகளும் தங்கள் பரப்புரைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பிற்கு எதிராக ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
சமீபத்தில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "ஜோ பிடன் அதிபரானால் எண்ணெய் துறையை ஒட்டுமொத்தமாக மூடிவிடுவார்" என்ற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ட்ரம்பின் இந்த குற்றச்சாட்டு அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், அமெரிக்காவின் ஜிடிபியில், பெரும் பகுதி இன்னும் எண்ணெய் துறையையே நம்பியிருக்கிறது.
இந்நிலையில், இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பிபிசி தொலைக்காட்சிக்கு ஜோ பிடன் அளித்த பேட்டியில், "நான் அதிக மாசை ஏற்படுத்தும் எண்ணெய் (fossil fuel) உற்பத்திக்கு வழங்கும் சலுகைகளை மட்டுமே நிறுத்த வேண்டும் என்கிறேன். ஒட்டுமொத்த எண்ணெய் துறையையே மூட வேண்டும் என்பது எனது எண்ணம் இல்லை" என்றார்.