அமெரிக்க அதிபராக இருக்கும் ட்ரம்பின் பதவிக்காலம் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடைகிறது. புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. கரோனா பரவல் காரணமாக, இத்தேர்தல் முழுவதும் அஞ்சல் மூலம் நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தேர்தலில் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடவுள்ளது ஏற்கனவே ஏறக்குறைய உறுதிசெய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரை முறைப்படி அறிவிக்கும், அக்கட்சியின் நான்கு நாள் மாநாடு நேற்று தொடங்கியது.
காணொலி வாயிலாக நடைபெறும் இந்த மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக 77 வயதான ஜோ பிடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இது குறித்துப் பேசிய ஜோ பிடன், "அனைவருக்கும் எனது இதயத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
இந்த மாநாட்டில் பில் கிளிண்டன், ஜிம்மி கார்ட்டர் உள்ளிட்ட ஜனநாயகக் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர். ட்ரம்பையும் அவரது ஆட்சியையும், ஜனநாயகக் கட்சியின் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துப் பேசினர்.