அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதலை தூண்டியதாக அப்போதைய அதிபர் ட்ரம்ப்க்கு எதிராக பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு எதிரான பதவி நீக்க விசாரணையிலிருந்து செனட் சபை ட்ரம்ப்பை விடுவித்தது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ஜோ பைடன், உண்மையை பாதுகாக்க அமெரிக்கர்கள் அனைவருக்கும் பொறுப்பும் கடமையும் உள்ளது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்கர்கள் குறிப்பாக நாட்டின் தலைவர்கள் அனைவருக்கும் உண்மையை பாதுகாக்கவும் பொய்யை வென்றெடுக்கவும் பொறுப்பும் கடமையும் உள்ளது.
இதன்மூலமாகவே, மக்களுக்கிடையேயான போரை முடித்து வைத்து நாட்டின் ஆன்மாவை மீட்டெடுக்க முடியும். இதுவே நமது எதிர்கால பணி. அப்பணியை நாம் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும். வன்முறைக்கும் தீவிரவாதத்திற்கும் அமெரிக்காவில் இடமில்லை" என குறிப்பிட்டுள்ளார்.
பதவி நீக்க விசாரணையின்போது, பெரும்பாலான குடியரசு கட்சி உறுப்பினர்கள் ட்ரம்ப்புக்கு ஆதரவாக பேசினர். செனட் சபையில் பதவி நீக்க தீர்மானம் வெற்றி பெறுவதற்கு மூன்றில் இரண்டு மடங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதனிடையே, 57-43 என்ற கணக்கில் பதவி நீக்க தீர்மானம் தோல்வி அடைந்தது.
இருப்பினும், பதவி நீக்க தீர்மானத்திற்கு ஆதரவாக 7 குடியரசு கட்சி உறுப்பினர்கள் வாக்களித்தனர். அடுத்த தேர்தலில் ட்ரம்பை போட்டியிட விடாமல் தடுக்கும் நோக்கில் பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது.