அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார். இவரின் அமைச்சரவையில் யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இதனிடையே, ஜனநாயக அதிபர் வேட்பாளர் தேர்வில் கடைசிவரை களத்தில் இருந்த பெர்னி சாண்டர்ஸூக்கு தொழில்துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் என தகவல் வெளியானது. ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்களை அமைச்சராகவே தூதராகவோ பைடன் நியமிப்பார் எனவும் கூறப்பட்டுவந்தது.
இந்நிலையில், முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரியை சுற்றுச்சூழல் தூதராக நியமித்து ஜோ பைடன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். எனவே, காலநிலை மாற்றம் என்ற பெரும் சவாலை சமாளித்து மீண்டும் பாரிஸ் ஒப்பந்தத்தில் சேரும் நோக்கில் ஜான் கெர்ரியை தூதராக பைடன் நியமித்துள்ளார் என கூறப்படுகிறது.