அமெரிக்காவில் நாளை (நவ. 3) அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகின்றார். தற்போதுவரை வெளியான கருத்துக்கணிப்புகளில் ஜனநாயகக் கட்சியே முன்னணியில் உள்ளது. 52 விழுக்காடு வாக்காளர்கள் பிடனுக்கு ஆதரவாக உள்ளனர் என இறுதிக்கட்ட தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பிசி செய்தி நிறுவனம் வால் ஸ்ட்ரீட் ஜர்னலுடன் இணைந்து எடுத்தக் கருத்துக்கணிப்பில், 42 விழுக்காடு வாக்காளர்கள் ட்ரம்ப்புக்கு ஆதரவாக உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு இந்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. அரிசோனா, புளோரிடா, ஜார்ஜியா, வடக்கு கரோலினா உள்ளிட்ட 12 மாகாணங்களில் ட்ரம்பைவிட பிடன் 6 புள்ளி வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.