தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 1, 2020, 4:13 PM IST

ETV Bharat / international

அதிபருக்கு வழங்கப்படும் ரகசிய அறிக்கை : ஒரு வழியாகப் படிக்கத் தொடங்கும் பைடன்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு வழங்கப்படும் தினசரி அறிக்கை, இன்று முதன்முறையாக ஜோ பைடனுக்கும் கமலா ஹாரிஸூக்கும் வழங்கப்பட்டது.

Biden gets access to Presidents Daily Brief
Biden gets access to Presidents Daily Brief

கடந்த மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றார். இருப்பினும், அதிபர் ட்ரம்ப் தனது தோல்வியை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகத் தெரிவித்த ட்ரம்ப், தேர்தல் முடிவுகள் குறித்து வழக்கும் தொடர்ந்துள்ளார்.

அதிபருக்கு வழங்கப்படும் ரகசிய அறிக்கை

இதன் காரணமாக அமெரிக்க அதிபருக்கு வழங்கப்படும் தினசரி அறிக்கை (President’s Daily Brief), ஜோ பைடனுக்கு வழங்கப்படாமல் இருந்தது. இதில் தேசத்தில் டாப் சீக்ரெட் தகவல்கள், பயங்கரவாதிகளின் திட்டம் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.

இந்நிலையில், சுமார் ஒரு மாத காலதாமதத்திற்குப் பின்னர், அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கும் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸுக்கும் தினசரி அறிக்கை அளிக்கப்பட்டது.

புதிய அதிபர் பொறுப்பேற்கும்போது, அவர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகவும், நாட்டின் முக்கியத் தகவல்களை அவர் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதற்காவும் இந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

ஐபேட்டில் படிக்க விரும்பிய ஒபாமா... படிக்கவே விரும்பாத ட்ரம்ப்

பொதுவாக ஒவ்வொரு அதிபருக்கும் இந்த தினசரி சுருக்கம் அவர்களுக்கு ஏற்றபடி வழங்கப்படும். அமெரிக்காவின் 44ஆவது அதிபரான ஒபாமாவின் தினசரி சுருக்கம் 10 முதல் 15 பக்கங்களைக் கொண்ட ஒரு ஆவணமாக இருந்தது. லெதர் ஃபைலில் வைக்கப்பட்டு ஒபாமாவின் காலை உணவு மேஜையில் அவருக்காக இந்த ஆவணம் வைக்கப்படும். பின்னாள்களில் பாதுகாக்கப்பட்ட ஐபேட் சாதனத்தில் தினசரி சுருக்கத்தை ஒபாமா படிக்க விரும்பினார்.

மறுபுறம், 45ஆவது அதிபரான ட்ரம்ப், குறைந்த வார்த்தைகளையும் அதிக கிராபிக் படங்களையுமே விரும்பினார். இருந்தபோதிலும், அதையும்கூட அவர் பல நேரங்களில் படிக்க விரும்பாததால், வாய்மொழியில் புலனாய்வு அலுவலர் ஒருவர் அவருக்கு அந்த அறிக்கையை விளக்கி வந்தார். ஆனால், இதுபோல் வாய்மொழியாக விளக்குவதும் கடந்த அக்டோபர் மாதம் நிறுத்தப்பட்டது.

பழுத்த அரசியல்வாதிக்கும் இது முக்கியம்

சுமார் 50 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஜோ பைடனுக்கு வெளியுறவு, அணு ஆயுதக் கொள்கை உள்ளிட்டவற்றில் கைத்தேர்ந்த அனுபவம் இருந்தாலும் தினசரி அறிக்கையைப் படிக்கும் பட்சத்தில்தான் அதிபராகப் பதவியேற்கும்போது அவர் தயாராக இருப்பார்.

அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடனும், முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸும் அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்க உள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படுமா?

ABOUT THE AUTHOR

...view details