அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு இன்னும் 10க்கும் குறைவான நாள்களே உள்ளதால் இரு தரப்பினரும் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கரோனா பரவல் முடிந்துவிட்டது என்பதை காட்டும் வகையில் அதிபர் ட்ரம்ப், தனது பரப்புரைகளில் மாஸ்க் அணியாமலும் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் பங்கேற்றுவருகிறார்.
ஆனால், மறுபுறம் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனின் பரப்புரை கூட்டங்கள் அனைத்தும் சமூக இடைவெளியை கடைபிடித்து நடத்தப்படுன்றன.
இந்நிலையில், நேற்று பென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய பிடன், "உங்களுடன் நெருக்கமான பரப்புரை கூட்டங்களில் பங்கேற்கவில்லை என்று எனக்கு கவலையாக உள்ளது; எனக்கும் இவை பிடிக்கவில்லைதான். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் இவை காலத்தின் கட்டாயம். நம்மால் பலருக்கு கரோனா பரவல் ஏற்பட்டுவிடக் கூடாது" என்றார்.