அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிபர் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களமிறங்குகிறார்.
தேர்தலுக்கு இன்னும் 20க்கும் குறைவான நாள்களே உள்ளதால், இரு கட்சியினரும் தங்கள் பரப்புரைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், நியூயார்க்கில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய அதிபர் ட்ரம்ப்பின் மூத்த மகன் ட்ரம்ப் ஜூனியர், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வென்றால் சர்வதேச அளவில் சீனாவின் கை ஓங்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் பேசுகையில், "சீனாவின் அச்சுறுத்தலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்க வாழ் இந்தியர்கள் அதனை நன்றாக அறிவார்கள்.
சீனர்கள் ஜோ பிடனுக்கு தேர்தல் நன்கொடையாக 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொடுத்துள்ளனர். அவரை எளிதில் வாங்கிவிடலாம் என்று சீனா நினைப்பதாலேயே அவருக்கு ஆதரவளிக்கிறது. சீனா நினைப்பதைப் போல பிடன் வெற்றி பெற்றால், அது இந்தியாவுக்கும் பெரும் தீமையை ஏற்படுத்தும். பிடன் ஊழல்வாதி என்பதால்தான் சீனா மட்டுமின்றி ரஷ்யா, உக்ரேனும்கூட அவரை ஆதரிக்கிறது" என்றார்.
பிரதமர் மோடிக்கும் அதிபர் ட்ரம்பிற்கும் இடையேவுள்ள நட்பை குறிப்பிட்ட பேசிய அவர், "பிரதமர் (நரேந்திர) மோடியுடன் எனது தந்தை இருக்கும்போது அவர் மிகவும் உற்சாகமாக உள்ளார். அமெரிக்காவில் நடைபெறும் ட்ரம்ப்பின் பேரணிகள்தான் மிகப் பெரியவை என்று நான் நினைத்தேன். ஆனால், இந்தியாவில் நடைபெற்ற ட்ரம்ப்பின் பேரணிதான் உலகிலேயே மிகவும் பிரம்மாண்டமானதாக இருந்தது" என்றார்
இதையும் படிங்க: படைகளை வெளிநாட்டிற்கு அனுப்பாத தலைவர் என்று ட்ரம்ப் நினைவு கொள்ளப்படுவார்!