அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் செவ்வாய்கிழமை (நவ.3) நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப்பும், அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். தற்போதுவரை வெளியான கருத்துக்கணிப்புகளில் ஜனநாயகக் கட்சியே முன்னணியில் உள்ளது.
இந்நிலையில், முன்கூட்டியே வாக்களிக்கும் முறையை பயன்படுத்தி, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தனது சொந்த மாகாணமான டெலாவரில் நேற்று(அக்.28) வாக்களித்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பிடன், "Affordable Care Actஐை மேலும் சிறப்பானதாக மாற்ற என்னிடம் ஒரு முன்மொழிவு உள்ளது.
மக்கள் தங்கள் தனியார் காப்பீட்டை வைத்திருக்க அனுமதிப்பதன் மூலம் குறைந்த செலவில் அவர்களால் சிறந்த திட்டத்தை அனுபவிக்க முடியும்" என்றார். புதன்கிழமை (அக்.28) மதியம் வரை முன்கூட்டியே வாக்களிக்கும் முறையை பயன்படுத்தி, சுமார் 7.5 கோடி பேர் வாக்களித்துள்ளனர். கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்காவில் மொத்தமே 13.8 கோடி வாக்குகளே பதிவானது குறிப்பிடத்தக்கது. கரோனா பரவல் காரணமாக முன்கூட்டியே வாக்களிக்கும் முறையை அதிகம் பேர் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
சிஎன்என் நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய கருத்துகணிப்பில் ஜோ பிடன் 54 விழுக்காடு வாக்குகளையும், அதிபர் ட்ரம்ப் 42 விழுக்காடு வாக்குகளையும் பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்களித்தார் அதிபர் ட்ரம்ப்