அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில், இரு கட்சிகளும் தங்கள் பரப்புரைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பிற்கு எதிராக ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
அமெரிக்காவில் ஒவ்வொரு கட்சியின் அதிபர் வேட்பாளரும் உள்கட்சித் தேர்தல் மூலமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதில் ஜோ பிடனுக்கு எதிராகக் களமிறங்கி கடைசி வரை களத்தில் இருந்தவர் பெர்னி சாண்டர்ஸ்.
இந்நிலையில், ஜோ பிடன் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் தீவிர இடதுசாரியாக அறியப்படும் பெர்னி சாண்டர்ஸுக்கு அமைச்சரவையில் இடமிருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பொலிடிகோ செய்திகள் (Politico news) வெளியிட்டுள்ள தகவலின்படி, "அவருக்கு (சாண்டர்ஸ்) தனிப்பட்ட முறையில் ஆசை உள்ளது. எனவே இதற்குத் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபடவும் அவர் தொடங்கிவிட்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.