கரோனா பெருந்தொற்றின் மத்தியில், கல்லூரிகளின் பெரும்பாலான பட்டமளிப்பு விழாக்கள் மெய்நிகர் வடிவிலும், காணொலி வாயிலாகவும் நடைபெற்று வரும் நிலையில், கூகுளின் வீடியோ தளமான யூ-ட்யூப், இந்த வருடம் பட்டம் பெறும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் மெய்நிகர் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இதில் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அவரது மனைவி மிட்சல் ஒபாமா, கொரிய பாப் குழு பி.டி.எஸ், பாடகர்கள் பெயான்ஸே, லேடி காகா, அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ராபர்ட் எம் கேட்ஸ், முன்னாள் வெளியுறவு செயலாளர் கொண்டலீசா ரைஸ், சமூக ஆர்வலர் மலாலா யூசஃப்சாய் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் மாணவர்களுடன் உரையாடிய கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் சுந்தர் பிச்சை, "நீங்கள் கற்பனை செய்த பட்டமளிப்பு விழா இது அல்ல என்பது எனக்குத் தெரியும். நீங்கள் இத்தனை வருடங்கள் பெற்ற அறிவை கொண்டாட வேண்டிய ஒரு தருணத்தில், நீங்கள் இழந்ததை எண்ணி வருத்தப்படக்கூடிய நிலையில் பலர் இருக்கலாம். நாம் எதிர்நோக்கிக் காத்திருக்கும் வாழ்க்கைத் திட்டங்கள், வேலை, அனுபவம் ஆகியவற்றைத் தாண்டி, இது போன்ற இருண்ட தருணங்களில், நம்பிக்கையைக் கண்டறிவது மிகக் கடினம்.
இந்த நேரத்தில் நீங்கள் அனைவரும் திறந்த மனதுடனும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். அதை செய்ய முடிந்தால், நீங்கள் இழந்தவற்றிற்காக அல்லாமல், நீங்கள் மாற்றியவைகளுக்காக வரலாறு 2020ஆம் ஆண்டு மாணவர்களான உங்களை நினைவில் வைத்திருக்கும். இவை அனைத்தையும் மாற்றும் வாய்ப்பு உங்களிடம் உள்ளது. நீங்கள் இதை செய்வீர்கள் என எனக்கு நம்பிக்கை உண்டு" என தெரிவித்தார்.
தொடர்ந்து, “1920ஆம் ஆண்டு பெருந்தொற்றின் நடுவே பட்டம் பெற்ற மாணவர்கள், 1970 வியட்நாம் போரின் இடையே பட்டம் பெற்றவர்கள், 2001ஆம் ஆண்டு இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டபோது பட்டம் பெற்றவர்கள் என இதேபோன்ற அமெரிக்காவின் பல நெருக்கடி கால கட்டத்தின் இடையே பட்டம் பெற்ற மாணவர்கள், அனைவருமே வெற்றி பெற்றனர். எனவே நீங்களும் நம்பிக்கையுடன் காத்திருங்கள்.