கரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணிகளில் ஏராளமான நிறுவனங்கள் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றன. அதில் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்திற்கு (கோவிஷீல்ட்) உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்து, 90 விழுக்காடு வரை பலனளிப்பதாக அநிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது முதலில் அரை டோஸ் மருந்து அளித்து, அதன் பின்னர் 30 நாள்கள் கழித்து முழு டோஸ் மருந்து அளிக்கும்போது, இது 90 விழுக்காடு வரை பலனளிக்கிறது.
அதேநேரம் 30 நாள்கள் இடைவெளியில், இரண்டு முழு டோஸ் மருந்தை அளிக்கும்போது இதன் தடுப்பாற்றால் 62 விழுக்காடு உள்ளது. சராசரியாக இதன் தடுப்பாற்றல் 70 விழுக்காடாக உள்ளது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இந்தத் தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டவர்கள் எவ்வித மோசமான பக்கவிளைவுகளையும் எதிர்கொள்ளவில்லை.
முன்னதாக, கடந்த வாரம் அமெரிக்காவின் ஃபைஸர், மாடர்னா நிறுவனங்களின் கரோனா தடுப்பு மருந்து முறையே 95%, 94.5% தடுப்பாற்றல் கொண்டதாக அந்நிறுவனங்கள் அறிவித்திருந்தன. இதை ஒப்பிடும்போதும் ஆக்ஸ்போர்டின் கரோனா தடுப்பு மருந்தின் ஆற்றல் குறைவாகவே உள்ளது.
இருப்பினும், மற்ற இரு கரோனா தடுப்பு மருந்துகளை மிகக் குறைவான வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். ஆனால், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கரோனா தடுப்பு மருந்தை அவ்வளவு குறைவான வெப்பநிலையில் வைத்திருக்கத் தேவையில்லை.