அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் செவ்வாய்க்கிழமை (நவ.3) நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப்பும், அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.
தற்போதுவரை வெளியான கருத்துக்கணிப்புகளில் ஜனநாயகக் கட்சியே முன்னணியில் உள்ளது. குறிப்பாக ஆசியா, ஆப்பிரிக்கா, ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஜோ பிடனுக்கு ஆதரவளிக்கின்றனர். அதேபோல் வெள்ளையின மக்கள் ட்ரம்ப்பிற்கு ஆதரவளிக்கின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் இறுதி வரை 71 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 51 சதவீதம் வாக்காளர்கள் பிடனுக்கு ஆதரவாகவும், 43 சதவீதம் வாக்காளர்கள் ட்ரம்பிற்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
வயதுவாரியாக பார்க்கும்போது 18 முதல் 29, 30 முதல் 54 வயதுடைய மக்கள் பிடனுக்கு ஆதரவாக வாக்களிக்கின்றனர். அதே நேரம் 65 வயதிற்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோர் ட்ரம்பையே ஆதரிக்கின்றனர்.