தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அர்ஜென்டினாவில் கருக்கலைப்புக்கு ஒப்புதல் அளிக்கும் மசோதா நிறைவேற்றம்! - கருக்கலைப்பு

அர்ஜென்டினாவில் பல ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு கருக்கலைப்புக்கு ஒப்புதல் அளிக்கும் மசோதா அந்நாட்டு செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது.

அர்ஜென்டினா செனட் சபை
அர்ஜென்டினா செனட் சபை

By

Published : Dec 30, 2020, 5:06 PM IST

கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் மசோதாவுக்கு அர்ஜென்டினா செனட் சபை இன்று (டிச.30) ஒப்புதல் அளித்துள்ளது. அந்நாட்டு செனட் சபையில் நடைபெற்ற 12 மணி நேரக் கூட்டத்தைத் தொடர்ந்து, ஒருவர் வாக்களிக்காத நிலையில், 38 ஆதரவு வாக்குகள், 29 எதிர்ப்பு வாக்குகளுடன் இந்த மசோதா நிறைவேறியது.

இச்சட்டத்தின்படி, ஒரு குழந்தையை சுமக்கும் திறன்கொண்ட பெண்கள் உள்ளிட்ட பிற பாலின அடையாளங்களைக் கொண்ட நபர்கள் எவரும், தங்களது கர்ப்பக் காலத்தின் முதல் 14 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்துகொள்ள உரிமை உண்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரமான கத்தோலிக்க கொள்கைகளைப் பின்பற்றும் நாடுகளில் ஒன்றும், நடப்பு போப் பிரான்சிஸின் சொந்த நாடுமான அர்ஜெண்டினாவில் முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு இம்மசோதாவைத் தாக்கல் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அப்போது ஏழு ஓட்டுகள் வித்தியாசத்தில் இம்முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

இந்த மசோதாவுக்கு அந்நாட்டின் கீழ் சபை டிசம்பர் 11ஆம் தேதி முன்னதாக ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில் இந்த மசோதா அந்நாட்டின் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கருக்கலைப்பு, கருச்சிதைவு ஆகிய காரணங்களால் அந்நாட்டில் ஆண்டு தோறும் 14 வயதுக்கு கீழான சிறுமிகள் தொடங்கி 19 வயது வரையிலான இளம்பெண்கள் வரை அதிகம் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், இந்த மசோதாவை அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையம், மகளிர் ஆணையங்கள் வரவேற்றுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details