முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் எனப்படும் Face Recognition techonolgy-ஐ பயன்படுத்தி பொது இடங்களிலுள்ள குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்கலாம் என்பதால் அமெரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் காவல் துறையினர் இந்தத் தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
இருப்பினும், இத்தொழில்நுட்பம் என்பது கருமையான தோல் நிறம் கொண்டவர்களிடம் சரியாக வேலை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் பல ஆண்டுகளாகவே உள்ளன. மேலும், காவல் துறையினர் இந்தத் தொழில்நுட்பத்தை முறைகோடகப் பயன்படுத்துவதாகவும் கூறப்பட்டுவந்தது. இதன் காரணமாக அமெரிக்காவிலுள்ள பல நகரங்கள் முக அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை காவல் துறையினர் பயன்படுத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை ஐபிஎம் நிறுவனம், இந்தத் தொழில்நுட்பம் அதிகளவிலான கண்காணிப்பிற்கும், இன ரீதியான அடையாளம் காணுலுக்கும் பயன்படுத்தப்படுவதால், இந்தத் தொழிலில் இருந்து முற்றிலுமாக விலகவுள்ளதாகத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், அமேசான் நிறுவனம் தனது முக அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை (Face Recognition) பயன்படுத்த அமெரிக்க காவல் துறைக்கு ஓராண்டு தடை விதித்துள்ளது. இந்தத் தடை எதற்காக விதிக்கப்பட்டது என்பது குறித்து எவ்வித விளக்கத்தையும் அமேசான் அளிக்கவில்லை.