உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் பெருந்தொற்றால் பல நாடுகளில் பெருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இத்தொற்றின் கோரப்படியில் சிக்கித் தவிக்கும் வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில், இதுவரை 12,63,183 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 74,807 பேர் உயிரிழந்துள்ளனர். 2, 13,109 பேர் குணமடைந்தனர்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக, அந்நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள், கட்டட பணிகள் முடங்கின. இதன் விளைவாக, அந்நாட்டில் தினந்தோறும் லட்சகணக்கானோர் வேலைகளை இழந்துவருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் கரோனாவால் அமெரிக்காவில் 2 கோடியே இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைகளை இழந்தததாக அந்நாட்டின் ஊதிய நிறுவனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதில்,500 தொழிலாளர்கள் அல்லது அதற்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்டு இயங்கிவந்த சிறு நிறுவனங்கள்தான் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர மருத்துவத் துறைச் சார்ந்த 86 லட்ச ஊழியர்களும், வர்த்தகம், போக்குவரத்துத் துறைச் சார்ந்த 34 லட்ச ஊழியர்களும், கட்டுமான நிறுவனங்களைச் சேர்ந்த 25 லட்ச ஊழியர்களும், 17 லட்ச உற்பத்தியாளர்களும், சுகாதாரத் துறைச் சார்ந்த 10 லட்ச ஊழியர்களும் வேலைகளை இழந்துள்ளனர்.
வேலைவாய்ப்பு குறித்து அமெரிக்க தொழிலாளர் துறை அதிகாரப்பூர்வ விவரங்களை தெரிவிக்கும் இரண்டு நாள்கள் முன்னதாகவே தனியார் தொழில்துறை அறிக்கை வெளியிட்டுள்ளன. அதனால், நாளை வெளியாகும் தரவுகளின்படி, மார்ச் மாதத்தில் அமெரிக்காவில் 4.4 விழுக்காடாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் தற்போது 16 விழுக்காடு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் நம்புகின்றனர்.
இது குறித்து மூடி பகுப்பாய்வின் தலைமை பொருளாதார நிபுணர் மார்க் சாண்டி கூறுகையில், "ஏப்ரல் மாதத்தைப் போலவே இம்மாதமும் (மே) வேலை இழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பின், ஜூன் மாதத்திலிருந்து மீண்டும் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டாலும் அதை சரிசெய்ய பல ஆண்டுகளாகும்" என்றார்.
இதையும் படிங்க:பாகிஸ்தான் விமானப் படையில் முதல்முறையாக ஒரு இந்து பைலட்!