வடஅமெரிக்க கண்டத்தின் வடக்கு அட்லாண்டிக், ஆர்டிக் கடல் பகுதியின் மத்தியில் அமைந்துள்ளது கிரீன்லாந்து. டேனிஸ் பிராந்தியமான இந்த கிரீன்லாந்தில் 82 விழுக்காடு பகுதி பனியால் சூழப்பட்டிருக்கும்.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை நிலவும் கோடைக்காலத்தின் போது அங்கு பனி உருகுவது வழக்கம். அச்சமயத்தில் உருகும் பனிப்படலங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி டேனிஸ் வானிலை மையத்தின் விஞ்ஞானிகள் கிரீன்லாந்து பகுதியில் பனி உருகுவது தொடர்பான அதிர்ச்சி கர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், இந்தாண்டு கிரீன்லாந்து பகுதியில் நிலவிவரும் அதிக வெப்பம் காரணமாக பனிபடலங்கள் உருகுவது அதிகரித்துள்ளது. கடந்த வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்தாண்டு பனியின் உருக்கம் அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உருகும் கிரீன்லாந்து பனிப்படலங்கள் ஜூன் 1ஆம் தேதி நிலவரப்படி 240 கோடி மெட்ரிக் டன் அளவிலான பனி உருகியுள்ளது. இது 2012ஆம் ஆண்டில் உருகிய மொத்த பனியின் அளவை விட கொஞ்சம் குறைவு. மேலும் கடந்த புதன்கிழமை மட்டும் சுமார் பத்துகோடி டன் அளவிலான பனிப்படலங்கள் உருகியுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வாராங்களுக்கு முன் வடஆப்பிரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வீசிய வெப்பக்காற்றினால் பெல்ஜியம், ஜெர்மனி, லக்ஸம்பெர்க், நெதர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நகரங்களில் பெரிய அளவிலான வெப்பம் பதிவானது. தற்போது கிரீன்லாந்திலும் இந்த வெப்பம் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்க கூடிய ஒன்றாக அமைந்துள்ளது.
கிரின்லாந்தின் மேற்கு பகுதியில் ஆவணப்படம் எடுத்து வரும் ஹார்லோவ் என்பவர் இந்த பனி உருகும் நிகழ்வை காட்சிப் படுத்தியிருக்கிறார்.