தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 30, 2020, 4:35 PM IST

ETV Bharat / international

கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த உதவும் ரெமடிசிவர்!

வாஷிங்டன்: கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய ரெமெடிசிவர் உதவுவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

coronavirus
coronavirus

கோவிட்-19 தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தீநுண்மி பரவலைக் கட்டுப்படுத்த பல நாடுகளும் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில் இந்தத் தீநுண்மி தொற்றுக்கு தடுப்பு மருந்தைக் கண்டறிய பல்வேறு நாடுகளிலுள்ள ஆராய்ச்சியாளர்களும் பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கரோனா தீநுண்மிக்கு எதிராக ஒரு சோதனை மருந்து செயல்படுகிறது என்பதை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது நோயாளிகளுக்கு விரைவில் கிடைக்கத் தேவையான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட 1063 நோயாளிகளுக்கு ரெமெடிசிவர் என்ற மருந்து அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நோயாளிகள் குணமடையும் காலம் 31 விழுக்காடு குறைந்து 15 நாள்களிலிருந்து 11 நாள்களாகக் குறைந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மருந்தின் மூலம் உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியுமா என்பது குறித்த உறுதியான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்காவின் தேசிய சுகாதார அமைப்பைச் சேர்ந்த டாக்டர் அந்தோணி, "கரோனா தீநுண்மியை ரெமெடிசிவர் கட்டுப்படுத்துகிறது. எனவே கரோனா சிகிச்சையில் இது முக்கியமானது.

ரெமெடிசிவர் மருந்தை பல்வேறு சோதனைகளில் மதிப்பீடு செய்துள்ளோம். அனைத்திலும் இது தீநுண்மியைக் கட்டுப்படுத்துவது தெளிவாகத் தெரிகிறது" கூறினார்.

ரெமெடிசிவர் மருந்தை எடுத்துக்கொண்டவர்களின் இறப்பு விகிதம் எட்டு விழுக்காடாக உள்ளது. அதேநேரம் இந்த மருந்தை எடுத்துக்கொள்ளாதவர்களின் இறப்பு விகிதம் 11.6 விழுக்காடாக உள்ளது.

இது குறித்து ஆராய்ச்சியாளர் கூறுகையில், "இறப்புகளைப் பொறுத்தவரை மருந்து உட்கொண்டவர்களுக்கும் மருந்தை உட்கொள்ளாதவர்களுக்கும் பெரிய அளவில் வேறுபாடு இல்லை.

இதனால் ரெமெடிசிவர் உயிரிழப்பைக் கட்டுப்படுத்த உதவும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. ஆனால் இந்த ரெமெடிசிவர் மருந்தை எடுத்துக்கொள்பவர்கள் குணமடையும் காலம் குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளது" என்றார்.

அமெரிக்காவைத் தவிர சீனா உள்ளிட்ட பிற நாடுகளும் கரோனா தீநுண்மிக்கு மருத்துவம் அளிக்க ரெமெடிசிவர் மருந்தைப் பயன்படுத்தலாமா என்பது குறித்து ஆய்வுகளை நடத்திவருகின்றன.

சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்கக் காரணமான கோவிட்-19 தொற்றுக்குச் சர்வதேச அளவில் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு சிகிச்சை முறையோ அல்லது தடுப்பு மருந்தோ அறிவிக்கப்படவில்லை.

இருப்பினும் தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எளிதில் குணமடைய ரெமெடிசிவர் உதவும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் அமெரிக்க பொருளாதாரம் பெரும் சரிவு!

ABOUT THE AUTHOR

...view details