வாஷிங்டன்:தடுப்பூசி குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ட்வீட் செய்துள்ளார்.
அதில், "நாட்டில் இதுவரை 18 வயதுக்கு மேல் உள்ள 50 விழுக்காடு நபர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது சாதரண காரியம் இல்லை. இந்த நிலையை எட்ட உதவிய அனைவரும் என் நன்றிகள்" என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் மட்டும் கரோனாவால் ஆறு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால், கடந்த சில வாரங்களாகவே அமெரிக்காவில் கரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் அமெரிக்காவில் சராசரியாகத் தினசரி 30 ஆயிரத்திற்கும் குறைவான நபர்களுக்கு மட்டுமே கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. ஜூன் 18, 2020ஆம் தேதிக்குப் பிறகு தொற்று பாதிப்பு இந்தளவு குறைவது இதுவே முதல் முறையாகும்.
இரண்டு டோஸ் தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டவர்கள் பொது இடங்களில் முகக்கவசங்கள் அணியத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 60 விழுக்காடு பேர், குறைந்தபட்சம் தடுப்பூசியின் ஒரு டோஸை எடுத்துக் கொண்டுள்ளனர்.
அவர்களில் தற்போது 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் 2 டோஸ்களையும் எடுத்துக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ட்விட்டில் பதிவுசெய்துள்ளார்.