தனது செல்வாக்கு பெருமளவு சரிந்து வரும் நிலையில், எதிர்வரும் தேர்தலில் அதிபர் பதவியைத் தக்கவைக்க பிரம்மப்பிராயத்தனம் மேற்கொண்டுள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்க வாக்காளர்களுக்கு வானத்து நிலவையே தருவதாக வாகுறுதிகளை அள்ளி வீசியிருக்கிறார். அவர் சார்ந்துள்ள குடியரசுக் கட்சியின் சார்பாக மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பத்தே மாதங்களில் 10 மில்லியன் வேலை வாய்ப்பை உருவாக்குவதும், இவ்வருட இறுதியில் கோவிட்-19 வைரஸ் தடுப்பு மருந்தை தருவதும் வாக்குறுதிகளில் மிக முக்கியமானவை ஆகும். ”உங்களுக்காகப் போராடுகிறேன்” என்ற தேர்தல் அறிக்கையில், வெள்ளை மாளிகைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் தாம் செய்யவிருப்பதாக இன்னும் பல வாக்குறுதிகளை அள்ளித் வீசியிருக்கிறார் டிரம்ப்.
“சுதந்திரம், ஜனநாயகம், வளம் மற்றும் செழிப்பு, அமைதி, சமாதானம், நீதி, வலிமையான தேசம் மற்றும் சமூக பாதுகாப்பு ஆகிய விழுமியங்களைக் கட்டிக்காக குடியரசுக் கட்சி பாடுபடும்,” என்று அந்த பழம்பெரும் கட்சியின் ஆசிய-பசிபிக் பிராந்திய ஊடக இயக்குநர் மரினா ட்ஸே, தேர்தலை ஒட்டி செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
”அமெரிக்கர்களை வலிமைப்படுத்தி அதிகாரமிக்கவர்களாக்கவும், சட்டபூர்வமான வழிமுறைகளில் அமெரிக்காவில் குடியேறும் அணைவரும், மாபெரும் அமெரிக்கக் கனவை நனவாக்கும் விதமாக பங்காற்ற வாய்ப்புகளை உறுதிசெய்து வாழ்வை மேலும் மேம்படுத்தி வளம் பெறும் வகையில் அதிபர் டிரம்ப்-ன் கொள்கைகள் அமைந்துள்ளன,” என ட்ஸே கூறுகிறார்.
இரண்டாம் முறையாக வெற்றிபெற்றால், அவரது செயல்திட்டம் விரிவான எட்டு முக்கிய அம்சங்களைக் கொண்டிருக்கும் என டிரப்ம்ப்-ன் தேர்தல் பரப்புரை அலுவலகம் அறிவித்துள்ளதை ட்ஸே சுட்டிக்காட்டுகிறார். அனைத்தையும் உள்ளடக்கிய எட்டு அம்சங்கள் பின்வருமாறு: வேலை வாய்ப்பு, கோவிட்-19, கல்வி, ஊழல் ஒழிப்பு, காவல்துறைக்குப் பாதுகாப்பு, சட்டவிரோத குடியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து அமெரிக்க தொழிலாளரைப் பாதுகாத்தல், எதிகாலத்திற்கான புதிய தொழில்நுட்பம் மற்றும் அமெரிக்காவின் முதன்மை.
புதிய மொந்தையில் பழைய கள் என்பதற்கேற்ப டிரம்ப்-ன் 2020 தேர்தல் வாக்குறுதிகள், அவரது 2016 வாக்குறுதிகளையே மீண்டும் நினைவுபடுத்துகின்றன என்பது வியப்புக்குரியதல்ல. அமெரிக்கர்களுக்கு அதிகப்படியான வேலை வாய்ப்பை உருவாக்குவது, சட்டவிரோத குடியேற்றத்தை முற்றாக ஒழிப்பது மற்றும் சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பு என 2016-லும் இதே முழக்கம்தான். எதுவும் புதியதில்லை.
இருப்பினும் இந்தமுறை இணைச்சேர்க்கையாக சொல்லப்பட்டிருப்பது இரண்டு. அவற்றில் ஒன்று, கரோனா வைரஸ் பரவலை ஒழிக்கத் தடுப்பு மருந்து. மற்றொன்று, ஒரு கனவுத் திட்டம். நிரந்தரமான ஒரு வின்வெளிப் படையை உருவாக்கி, நிலவில், மனிதர்கள் அடங்கிய படைத்தளத்தை நிறுவுவது.
வேலைவாய்ப்பு என்ற பிரிவின் கீழ், டிரம்ப்-ன் தேர்தல்பரப்புரை அலுவலகம் தெரிவித்திருக்கும் வாக்குறுதி மலைக்க வைக்கும். வெற்றிபெற்ற பத்தே மாதங்களில் 10 மில்லியன் புதிய வேலைவாய்ப்பும், ஒரு மில்லியன் சிறு-குறு தொழில் வாய்ப்புகளும் உருவக்க உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், வரி விலக்கு மற்றும் சலுகைகள் வாயிலாக, தனிநபர் வருமானம் உயரவும், வேலைவாய்ப்பு அமெரிக்காவை விட்டு இடம் பெயராமல் இருக்கவும் தேவையான அணைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கும் மேலாக, நியாயமான வர்த்தக ஒப்பந்தங்கள் மூலமாக, அமெரிக்க நலனையும் அமெரிக்க வேலைவாய்ப்புகள் பிற நாடுகளுக்குப் பறிபோகாமல் பாதுகாத்து, ”அமெரிக்கத் தயாரிப்பு”களை ஊக்கப்படுத்த வரிச்சலுகைகள் அளிப்பதன் வாயிலாக வேலைவாய்ப்புக்கான தளங்களை விரிவாக்குவதுடன் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி ஆற்றல் தற்சார்பு அடையவும் உறுதியளிக்கப் பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஊழித்தாண்டவமாடும் கரோனா வைரஸ் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அதிபர் டிரம்ப் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து கடுமையான விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்வதில் திக்குமுக்காடும் டிரம்ப், கோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர இவ்வருட இறுதிக்குள் தடுப்பு மருந்து கண்டறியப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என உறுதியளித்துள்ளார். மேலும், வைரஸ் தொற்று முழுமையாக களையப்பட்டு, 2021-ல் இயல்பு நிலை திரும்பும் என முழக்கமிட்டுள்ளார். இவற்றோடு, எதிர்காலத்தில் பெருந்தொற்றால் பேரிடர் ஏற்படுவதை எதிர்கொள்ளவேண்டி இன்றியமையாத உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவத் துறை பணியாளர்களுக்குத் தேவையான அணைத்து சாதனங்களும், பொருட்களும் தேவையான அளவு கையிருப்பில் வைத்திருப்பதையும் டிரம்ப்-ன் செயல் திட்டம் முக்கிய அம்சங்களாக தெரிவிக்கிறது.
முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கொண்டுவந்த ’ஒபாமா கேர்’ என்று அழைக்கப்படும் ’அனைவருக்கும் மருத்துவ சேவை’ (குறைந்த செலவில் தரமான மருத்துவம்) என்ற திட்டத்தை தவிடுபொடியாக்கும் முயற்சியில், டிரம்ப் நிர்வாகம் முழுமூச்சாக செயற்பட்டது. ஆனால், இப்பொது எல்லாமே தலைகீழ். தேர்தல் அறிவிப்பில், மருத்துவத் துறை குறித்த பிரிவில் அத்தியாவசிய மருந்துகளின் விலைக் குறைப்பு, மருத்துவர்கள்- நோயாளிகளை மருத்துவத் துறையின் பொறுப்பாளர்கள் ஆக்குதல், மருத்துவத்திற்கான் காப்பீட்டு பிரிமியத்தைக் குறைத்தல், மருத்துவமனைகளில் திடீர் கட்டணம் வசூலித்தலை முடிவுக்குக் கொண்டுவருதல், நோயாளிகளுக்கு முன்னரே உள்ள குறைபாடுகளையும் உள்ளடக்கிய சேவை, சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவ சேவையை உறுதிப்படுத்துதல், முன்னாள் இராணுவத்தினருக்கு தகுந்த பாதுகாப்பு அளித்து உலகத்தரத்திற்கு ஈடான சிறப்பான மருத்துவசேவை அளித்தல் ஆகியவை செயல்திட்டத்தில் கூறப்பட்டுள்ளன.
விரும்பும் பள்ளியில் படிக்கும் வாய்ப்பை மாணவருக்கு வழங்குவதுடன், அவர்களுக்கு அமெரிக்காவின் விதிவிலக்கான தனித்தன்மையைக்’ கற்பிப்பது, கல்விக்கான பிரிவில், தேர்தல் வாக்குறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்பின் தேர்தல் பரப்புரை அலுவலகம் வெளியிட்டுள்ள செயல் திட்டத்தில், ஊழல் ஒழிப்பு மற்றும் நிர்வாக சீர்கேடுகளைக் களைதல் என்ற தலைப்பில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து பதவி வகிப்பதைக் கட்டுப்படுத்தும் சட்டம் கொண்டுவரப்படும் என்பது முக்கிய அம்சமாகும். இதுதவிர, அமெரிக்க குடிமக்களையும் சிறுவணிகர்களையும் வாட்டும் அதிகாரவர்க்கத்தின் கொட்டத்தை அடக்குவது, தலைநகர் வாஷிங்டனில் செயல்படும் பண முதலிகளின் தரகு நடவடிக்கைகளை வெளிக்கொணர்வது மற்றும் மக்களுக்கும், மாநிலங்களுக்கும் அதிகாரத்தைப் பரவலாக்குவது என்பவையும் வாக்குறுதிகளில் முக்கியமானவை ஆகும்.
அடுத்ததாக, உலகம் பல்துருவ அரசியலை நோக்கிச் செல்வதற்கு நேரெதிராக, அதிபர் டிரம்ப் அமெரிக்காவை மையப்படுத்திய ஒருதலைபட்ச செயல்பாட்டில் தீவிரம் காட்டுவதை செயல்திட்டம் பெருமைப்படுத்துகிறது. அமெரிக்க குடிமக்களை வருத்தும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கடிவாளமிட்டு, சர்வதேச அளவில் நிகழும் ஊழலைத் தடுப்பதான அறிவிப்பு, இந்த போக்கில் மாற்றம் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. டிரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கைகள் நேச நாடுகளையே உதறித்தள்ளும் வகையில் அமைந்தவை.