தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

850 குழந்தைத் திருமணங்களைத் தடுத்த தெரேசா கச்சிந்தமோட்டோ: யார் இவர்?

ஒரு பெண்ணுக்குக் கல்வியளிப்பதன் மூலம் நீங்கள் வாழும் மொத்தப் பகுதிக்கும் கல்வி கற்பிக்கிறீர்கள்... நீங்கள் இந்த உலகத்துக்குக் கல்வி கற்பிக்கிறீர்கள் - தெரேசா கச்சிந்தமோட்டோ

Theresa kachindamoto

By

Published : Jun 28, 2019, 4:56 PM IST

தென்கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதியில் உள்ள நாடு மலாவி. உலகிலேயே அதிக குழந்தைத் திருமணங்கள் நடைபெறும் நாடாக இது விளங்குகிறது. இங்கு நூற்றில் ஐம்பது பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இந்த முறையைத் தகர்த்து, பெண்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறார் தெரேசா கச்சிந்தமோட்டோ.

பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்போம் - தெரேசா கச்சிந்தமோட்டோ

மத்திய மலாவியில் அமைந்துள்ள டெட்சா மாவட்டத்தின் மூத்த தலைவராக தெரேசா கச்சிந்தமோட்டோ இருக்கிறார். மலாவியில் உள்ள 300 மூத்த தலைவர்களில் இவரும் ஒருவர். மூத்த தலைவர்கள்தான் அங்கு பாரம்பரியத்தின் பாதுகாப்பாளர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு கலாசார பழக்க வழக்கங்களை மாற்றியமைக்கவும், ஒழிக்கவும் உரிமை உள்ளது.

குழந்தைத் திருமண ஒழிப்பிற்காகவும், பெண்களின் கல்விக்காகவும் தெரேசா நடத்தும் போராட்டத்துக்கு உந்துதலாக ஒரு நிகழ்வு இருந்துள்ளது. டெட்சா மாவட்டத்தில் பிறந்த தெரேசா, 27 ஆண்டுகள் சோம்பா நகரில் உள்ள கல்லூரியில் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். பின்னர் டெட்சாவின் மூத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தன் சொந்த மண்ணுக்கு திரும்பிய அவர், 12, 13, 14 வயதையொத்த சிறுமிகள் குழந்தைகளுடன் இருப்பதைக் கண்டிருக்கிறார். அந்த சிறுமிகளிடம் இது யாருடைய குழந்தை என வினவியபோது, தங்களுடைய குழந்தைதான் என பதிலளித்துள்ளனர். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தெரேசா, இனியும் இதைத் தொடரவிடக் கூடாது. அவர்களும் கல்வி கற்று முன்னேறுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார்.

தன் மக்களுடன் தெரேசா கச்சிந்தமோட்டோ

சிறு வயதிலேயே திருமணம் செய்துகொள்ளும் பெண்களில் சிலர், கர்ப்ப காலங்களில் கருப்பை கிழிந்து மரணிக்கும் கொடுமையும் நடக்கிறது என்பதை தெரேசா சுட்டிக்காட்டுகிறார். 551 கிராமத் தலைவர்களின் பாரம்பரிய குழுத் தலைவரான தெரேசா, இதுவரை 850 குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்தியதோடு அவர்கள் அனைவரையும் பள்ளிக்கு அனுப்பியுள்ளார். குழந்தைத் திருமணத்தைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்த மலாவி அரசாங்கம், சில ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணத்துக்கான வயது 18 என நிர்ணயித்தது. எனினும் பெற்றோர்கள் சிலர் தங்கள் பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது, பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவதற்கு எதிராகவும் தெரேசா போராட வேண்டிய சூழல் இருந்தது. பெண்கள் தங்கள் முதல் மாதவிடாயின் போது பாலுறவு குறித்து கற்றுக்கொள்ள ஆசிரியர்களிடம் அனுப்பப்படுகின்றனர். அப்போதுதான் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய புரிதல் வரும் என்ற நம்பிக்கை அந்த மக்களுக்கு. ‘குகாசா ஃபம்பி’ (kukasa fumbi) என்ற பெயரில் நிகழும் இந்த ஒடுக்குமுறையால் அங்கு ஹெச்.ஐ.வி வைரஸ் பரவத் தொடங்கியது.

இதனை ஒழிப்பதற்கான முயற்சியாக, டெட்சா மாவட்டத்தில் உள்ள 50 துணைத் தலைவர்களிடம் தெரேசா ஒரு ஒப்பந்தமிட்டார். குழந்தைத் திருமணத்தையும், பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுவதையும் ஒழிப்பது தொடர்பான ஒப்பந்தம் அது, அதில் கையெழுத்திட மறுத்தவர்களை பணியிடை நீக்கம் செய்தார்.

‘யார் என்ன சொன்னால் எனக்கென்ன’ என்று பெண்கள் முன்னேற்றம் குறித்த சிந்தனையிலேயே மூழ்கிக் கிடக்கும் தெரேசாவை 9 லட்சம் மக்கள் தலைவராக ஏற்றுக்கொண்டு பின்பற்றுகின்றனர்.

பெண்கள் முன்னேற்றம் அவசியமானது - தெரேசா கச்சிந்தமோட்டோ

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த தெரேசாவிடம், நீங்கள் பழையபடி ஒரு கல்லூரி செயலாளராக பணிபுரிவதை பற்றி எண்ணியதுண்டா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தெரேசா ‘நான் மரணிக்கும்வரை நான்தான் இந்த மக்களுக்கு தலைவர்’ என சிரித்தபடியே சொல்லியிருக்கிறார்.அந்த அளவு தன் மக்களையும் மண்ணையும் நேசிக்கிறார்.

Courtesy: Aljazeera, UN Women

ABOUT THE AUTHOR

...view details