இந்தியப் பெருங்கடலில் உருவான இடய் புயல் மார்ச் 15ஆம் தேதி மொசாம்பிக் அருகே கரையை கடந்தது. இதனால் மொசாம்பிக் மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மேலும் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகள் மற்றும் பொருள்களை இழந்து தவிக்கின்றனர். இந்நிலையில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் மூலமாக மக்களுக்கு உணவு கொடுக்கப்பட்டுவருகிறது.
இதனிடையே நேற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நூற்றுக்கணக்கானோர் படகு மூலம் மொசாம்பிக் நாட்டிலுள்ள பெர்ரா துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
செஞ்சிலுவைச் சங்கம் வெள்ளத்தால் அனைத்தையும் இழந்த 75 ஆயிரம் மக்களுக்கு பத்து மில்லியன் டாலர்கள் வழங்க முடிவு செய்துள்ளது.
முன்னதாக, ஐ.நா.வின் கீழ் செயல்படும் உலக உணவுத் திட்டம் அமைப்பின் மூலமாக, மொசாம்பிக் மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப்பொருள்கள் வழங்கப்பட்டது. சுமார் ஆறு லட்சம் மக்களுக்கு உதவும் வகையில், ஐந்து டன் எடையுள்ள உணவுப்பொருள்களை ஐ.நா. அனுப்பியது.