வடக்கு ஆப்ரிக்க நாடான லிபியாவில் ஐநா ஆதரவு பெற்ற 'கவர்ன்மெண்ட் நேஷ்னல் அக்கார்ட்' (Government National Accord) என்ற இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிராக, ராணுவ அதிகாரி கலிஃபா ஹிஃப்தர் தலைமையிலான படையினர், கடந்த ஏப்ரல் மாதம் முதல் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் திரிபோலி அருகே தஜோடா அகதிகள் முகாம் மீது கடந்த செவ்வாய்க்கிழமையன்று வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
இதற்கு கலிஃபாவின் படையினர் தான் காரணம் என, லிபியா அரசு கூறிய வந்த நிலையில், தற்போது அந்த தாக்குதலை நடத்தியது ஐக்கிய அரபு அமீரகம் என, அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து லிபியாவின் உள்துறை அமைச்சர் ஃபாடி பஷாகா (Fathi Bashaagha) பேசுகையில்,
அகதிகள் மூகம் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது ஐக்கிய அரசு அமீரகம். இதற்கு, எஃப்-16 போர் விமானத்தைப் பயன்படுத்தியதாக தெரிவித்தார். மேலும், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதற்கு அரசிடம் ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்ற செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "வான்வழித் தாக்குதல் நடத்திய போர் விமானத்தின் ஒலியை விமான ஓடுநர்கள், நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். அதுபோக, வீசப்பட்ட குண்டுகளின் சக்தி மிக அதிகம்" எனத் தெரிவித்தார்.
முன்னதாக, 2014ஆம் ஆண்டு வட ஆப்ரிக்காவில் நடத்தப்பட்ட பல்வேறு வான்வழித் தாக்குதலுக்கு சவுதி அரேபியா, ஐக்கிய அரசு அமீரகம் ஆகிய நாடுகளே காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.