தென் ஆப்பிரிக்காவில் வடமேற்கு மாகாணத்தின் ருஸ்டன்பேர்க்கில் பிரிடேட்டர்கள் ராக் புஷ் லாட்ஜ் வனப்பூங்கா உள்ளது. இங்கு ஆண்,பெண்,குட்டிகள் உட்பட பல சிங்கங்கள் வசித்து வருகின்றன.
நேற்று காலை வனக்காப்பாளர் பூங்காவில் சிங்கங்களை காண முடியாததால் பெரும் குழப்பமடைந்தார். இதையடுத்து, சிங்கத்தை பூங்காவில் தேடியவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது, சுவற்றின் அருகில் அனைத்து சிங்கங்களும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், சிங்கங்களின் பற்கள், நகங்கள் பிடுங்கப்பட்டு மிகவும் கொடூரமான நிலையில் உயிரிழந்து கிடந்தது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை, காவல் துறை விசாரணை நடத்தினர். அதில், சிங்கங்களுக்கு கோழி இறைச்சியில் நஞ்சு கலந்து கொடுத்திருப்பது தெரியவந்தது.
சிங்கத்தை கொலை செய்தவர்கள் முதலில் நஞ்சு கலந்த கோழி இறைச்சியை மின்சாரத் தடுப்பு வேலியின் வெளியில் நின்று உள்ளே வீசியுள்ளனர். பின்னர், ஆயதங்களை வைத்து வேலியை அறுத்து சிங்கத்தின் சடலங்களிலிருந்து பற்கள், நகங்களை பிடுங்கியுள்ளனர். இச்சம்பவம் குறிப்பாக பில்லி சூனியத்திற்காக நடைபெற்றிருக்கும் எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.