ஆப்பிரிக்க நாடான லிபியாவில் சர்வாதிகாரி முஅம்மர் அல் கதாஃபிவின் மறைவுக்குப் பின்னர் பல்வேறு அரசியல் குழப்பங்கள் நிலவுகிறது. லிபியாவின் கிழக்குப் பகுதி லிபியன் தேசிய ரானுவத்தின் கட்டுப்பாட்டிலும், மேற்குப் பகுதி தேசிய இடைக்காலப் பேரவை அரசின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.
லிபியாவில் அகதிகள் முகாமில் தாக்குதல்: 40 பேர் பலி - air strike
திரிப்போலி: லிபியா தலைநகர் திரிப்போலி அருகே உள்ள அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 40 பேர் பலியாகினர்.
லிபிய தலைநகர் திரிப்போலியை கைப்பற்ற இரு பிரிவுகளுக்கிடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேசிய இடைக்காலப் பேரவை அரசின் கட்டுப்பாட்டிலுள்ள திரிப்போலி அருகே உள்ள தஞ்ஜோரா என்ற இடத்திலுள்ள அகதிகள் முகாமில் நேற்றிரவு நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 80 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்று இதுவரை தெரியவில்லை என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல் நடந்தது அகதிகள் முகாம் என்பதாலும், இரவு நேரத்தில் நடந்திருப்பதாலும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.