தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / headlines

'உழவர்களுக்குத் தரமான விதை, நெல்லை வழங்குக!' - திமுக அரசை சாடும் எடப்பாடி - Tn opposite party Edappadi Palaniswami

டெல்டா மாவட்ட உழவர்களுக்குத் தரமான விதை நெல்லை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

டெல்டா மாவட்ட விவசாயிகள்
டெல்டா மாவட்ட விவசாயிகள்

By

Published : Jul 2, 2021, 7:29 PM IST

சென்னை: வேளாண் விரிவாக்க மையத்திலிருந்து வழங்கிய விதை நெல்கள் முளைக்கவில்லை என உழவர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார் எனவும், எனவே தரமான நெல் விதைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிமுக அரசு கடந்தாண்டு குறித்த நாளில், அதாவது ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட்டதைத் தொடர்ந்து டெல்டா உழவர்கள் வேளாண் பணிகளில் முழுமையாக ஈடுபட்டுப் பயனடைந்தனர்.

அதுபோல, இந்தாண்டும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு டெல்டா மாவட்ட உழவர்கள், வேளாண் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

உழவர் சேற்றில் கால் வைத்தால்தான்; மற்றவர்கள் சோற்றில் கை வைக்க முடியும்
என்பதை உணர்ந்த அதிமுக அரசு, கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் உழவர்களுக்குப் பல்வேறு திட்டங்கள், சலுகைகள், உதவிகளை அளித்து அவர்களின் வாழ்வில் நிரந்தர ஒளி ஏற்றியது.

  1. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் முறைப்படுத்தும் குழு அமைத்து, 50 ஆண்டுகால காவிரி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு,
  2. டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது,
  3. குடிமராமத்துத் திட்டத்தில் சுமார் ஆயிரத்து 132 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் ஐந்தாயிரத்து 586 நீர்நிலைகள் தூர்வாரி சீரமைக்கப்பட்டன. மேலும் டெல்டா மாவட்டங்களில் கடைமடைப் பகுதிவரை கால்வாய்கள் தூர்வாரப்பட்டதால், குறித்த காலத்திற்குள் டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பாசன பரப்புகளுக்கும் காவிரி நீர் சென்றடைந்து, உழவர்கள் பயனடைந்தனர்.
  4. தானே புயல் நிவாரணம், வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம், சம்பா மற்றும்
    குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு, பயிர்க் காப்பீடு என்று கடந்த 10 ஆண்டுகளில்
    சுமார் ஒரு கோடியே 40 லட்சம் உழவர்களுக்கு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய்
    நிவாரணமாக அளிக்கப்பட்டது.
  5. சுமார் 1.06 கோடி உழவர்களுக்கு 10 ஆண்டுகளில் சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய்
    கூட்டுறவுக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
  6. ஐந்து ஆண்டுகளில் இரண்டு முறை உழவர்கள் கூட்டுறவுச் சங்கங்களில் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2016இல் சுமார் 12 லட்சம் உழவர்களுக்கு
    சுமார் ஐந்தாயிரத்து 318 கோடி ரூபாய் கடனும், 2021இல் சுமார் 16.43 லட்சம் உழவர்களுக்கு சுமார் 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் கடனும் தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளது.
  7. ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த உழவர்களின் 60 ஆண்டுகால கனவுத் திட்டமான அத்திக்கடவு–அவினாசி திட்டம் ஆயிரத்து 652 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டு 24 ஆயிரத்து 468 ஏக்கர் நிலம் பாசன வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
  8. விவசாய பம்பு செட்டுகளுக்கு இந்தாண்டு (2021) ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.
  9. நெல் ஜெயராமனின் பெயரில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் உருவாக்க
    நடவடிக்கை

என கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு வேளாண் துறையில் அகில இந்திய அளவில் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது.

  1. உணவு தானிய உற்பத்தியில் ஐந்து முறை கிருஷி கர்மான் என்ற மத்திய அரசின் உயர்ந்த விருதினைப் பெற்று சாதனை
  2. மத்திய அரசின் நீர் மேலாண்மைக்கான சிறந்த மாநில விருதைப் பெற்று தமிழ்நாடு சாதனை
  3. நுண்ணீர் பாசனத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு
    முதலிடம்.
  4. கூட்டுப் பண்ணையம், 'நீடித்த மானாவாரி வேளாண்மைக்கான இயக்கம்',
    'நுண்ணீர் பாசனம்' போன்ற முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தியமைக்காக
    2019-20ஆம் ஆண்டில் 'ஸ்கோட்ச் குழுமத்தின் தகுதிச் சான்றிதழை' தமிழ்நாடு
    அரசு பெற்றுள்ளது.
  5. காவிரி டெல்டா பகுதிகளில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் 32.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்செய்து சாதனை.

இப்படி, அடுக்கிக்கொண்டே போகலாம். தற்போதைய திமுக அரசின் அலட்சியத்தாலும், அஜாக்கிரதையாலும், குறித்த காலத்தில் தரமான விதை நெல்மணிகள் அனைவருக்கும் வழங்கப்படவில்லை என்று நடவுப் பணியில் ஈடுபட்டுள்ள வேளாண் பெருமக்கள் பெரிதும் வேதனை அடைந்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன.

டெல்டா மாவட்ட விவசாயிகள்

குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே வரகூரைச் சேர்ந்த உழவர் வீரமணி தனது ஒன்பது ஏக்கர் நிலத்தில், ஏழு ஏக்கரில் தனியாரிடமிருந்து ஏ.டி., 36 ரக நெல் விதையை வாங்கி நாற்று தயார் செய்துள்ளதாகவும், மீதமுள்ள இரண்டு ஏக்கருக்கு, செந்தலை வேளாண்மை விரிவாக்க மையத்திலிருந்து கோ-51 ரக விதை நெல்லை வாங்கி நாற்று தயார்செய்து விதைத்ததாகவும், ஏறத்தாழ விதைத்து 12 நாள்களாகியும் திமுக அரசு வழங்கிய விதை நெல்கள் முளைக்கவில்லை என்றும் உழவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உழவர் வீரமணி, வேளாண் துறை அலுவலர்களிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், அலுவலர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. அரசின் அலட்சியத்தால் பாதிப்படைந்துள்ள உழவர் வீரமணிக்குப் புதிய நெல் விதையை இலவசமாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் வீணாகிய விதை நாற்றுக்கு உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும். அதேபோல், வேறு எங்கேனும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளனவா என்பதை ஆய்வுசெய்வதோடு, எதிர்வரும் காலங்களில் மிகுந்த விழிப்புணர்வோடு, தரமான விதை நெல்களைத் தமிழ்நாடு உழவர்களுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details