மகாராஷ்டிர மாநிலம் மும்பை பங்கூர் பகுதியில் ஏப்ரல் 21ஆம் தேதி ஊரடங்கால் பூட்டப்பட்டிருந்த கடையை உடைத்து சிகரெட் பாக்கெட்டுக்கள் திருடிய ஒருவரை காவலர்கள் கைது செய்தனர். அவரிடம் விசாரணை செய்ததில் மேலும் பல குற்ற வழக்குகளில் அவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த நபரை கைது செய்த காவலர்கள் புறநகர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை காவலில் அனுப்பினார்.
காவலர்கள் அந்த நபரை, ’தானே’ மத்திய சிறைக்கு கொண்டுசென்றனர். ஆனால், தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற காரணத்தால் அங்கு அவரை வைக்க சிறை நிர்வாக அலுவலர்கள் மறுத்தனர். இதனையடுத்து ராய்காட்டில் உள்ள தலோஜா சிறைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார்.
இந்நிலையில் அந்த நபருக்கு தலோஜா சிறையில் கரோனா சோதனை செய்யப்பட்டது. சோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.