தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / headlines

திமுகவின் கொ.ப. செ ஆனார் தங்க தமிழ்ச்செல்வன்! - கொள்கை பரப்புச் செயலாளர்

சென்னை: முன்னாள் எம்ல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தங்கம்

By

Published : Aug 30, 2019, 12:19 PM IST

அதிமுகவை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழிநடத்தியபோது, அக்கட்சியின் தேனி மாவட்ட முகமாக வலம் வந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். அரசியல் ரீதியாக இவருக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் இடையே உட்கட்சி பூசல்கள் நிலவியதாக அப்போது செய்திகள் வெளி வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டாகப் பிரிந்தபோது, ஓபிஎஸ்ஸுக்கு எதிர் முகாமாக செயல்பட்ட டிடிவி தினகரனின் அமமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் ஐக்கியமானார். பின்னர், தினகரனின் தீவிர ஆதரவாளராக வலம் வந்த தமிழ்ச்செல்வனுக்கு தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை தினகரன் வழங்கினார்.

ஆனால், அவரின் அரசியல் எதிரியாக அறியப்படும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாரிடமே தோல்வியைத் தழுவினார். இது அவரது அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய அடி என அரசியல் பார்வையாளர்கள் கூறி வந்தனர்.

இதற்கிடையே, அமமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்த தங்க தமிழ்ச்செல்வன், அரசியலில் ஆரம்பக் காலம் முதலே எந்த கட்சியை எதிர்த்து அரசியல் செய்து வந்தாரோ அக்கட்சியான திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை இணைத்துக்கொண்ட கையோடு, சொந்த ஊரில் ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட கூட்டம் ஒன்றையும் நடத்தி தனது பலத்தை திமுக தலைமைக்கு மறைமுகமாக கூறியிருந்தார் தங்கம். ஆனால், அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக தங்க தமிழ்ச்செல்வனை நியமித்து திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக கொள்கை பரப்புச் செயலாளர்களாக செயல்பட்டு வரும் திருச்சி சிவா, ஆ.ராசா ஆகியோருடன் இணைந்து தங்க தமிழ்ச்செல்வனும் செயல்படுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details