சென்னை: சென்னை உள்பட தமிழ்நாட்டில் பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையங்களைக் குறிவைத்து ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 10 கொள்ளையர்கள் ஈடுபட்டனர்.
இந்தக் கொள்ளை வழக்கில் முக்கியக் கொள்ளையர்களான அமீர், வீரேந்தர் ராவத், நசீம் உசைன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு அமீர், வீரேந்தரை நீதிமன்றக் காவலில் எடுத்து காவல் துறையினர் விசாரத்து முக்கியத் தகவல்களைத் திரட்டியுள்ளனர்.
இந்நிலையில் மூன்றாவதாகக் கைதுசெய்யப்பட்டு சென்னை அழைத்துவரப்பட்ட முடிச்சூர் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட நசீம் உசைனை பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் வைத்து விசாரணைசெய்தனர்.
வாக்குமூலத்தில் ஹரியானாவிலிருந்து காரில் வந்தபோது வரும் வழியில் உள்ள பல ஏடிஎம்களில் பணம் திருடியதாகவும், மேலும் சென்னையில் பல ஏடிஎம்களில் மோசடியாக பணம் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பிறகு தாம்பரம் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சைதாப்பேட்டை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நசீம் உசைன் ஏழு நாள்கள் காவலில் எடுத்து முழுமையாக விசாரிக்க பீர்க்கன்காரணை காவல் துறையினர் தாம்பரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
தற்போது மனு மீதான விசாரணை தாம்பரம் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. நசீம் உசைன் பாதுகாப்புடன் தாம்பரம் நீதிமன்றம் அழைத்துவரப்பட்டார்.
மனு மீதான விசாரணையில் நீதிபதி சகானா, நசீம் உசைனை பீர்க்கன்காரணை காவல் துறையினர் நான்கு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.