சென்னை: தலைமைச் செயலகத்தில் வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில், "சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அலுவலர்களுடன் பட்டா வழங்குதல் தொடர்பாக முதற்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பட்டா வழங்குவதில் காலதாமதம் ஏற்படக்கூடாது. விரைந்து பட்டா வழங்கப்பட வேண்டும் மற்றும் போலி பட்டா வழங்கப்பட்டிருந்தால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், பட்டாக்களில் தவறு இருக்குமேயானால் காலதாமதமின்றி மாற்றி கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு நிலங்கள்:
இந்த நான்கு மாவட்டங்களில் அரசு நிலங்கள், சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால் அதன்மீது நடவடிக்கை எடுத்து நிலங்களை கையகப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்காக நிலங்களின் தேவை இருக்கிறது, ஆகவே இந்த மாவட்டத்திலுள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிற துறைகள் சார்ந்த ஆக்கிரமிப்பு நிலங்களை கையக்கப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு இடங்களில் உள்ள குத்தகைதாரர்கள் பல பேர் பணம் கட்டவில்லை எனும் குற்றச்சாட்டு உள்ளது. அவர்களுக்கு 15 நாள்கள் நோட்டீஸ் கொடுத்து, பணத்தை கட்ட வைக்கவும். மறுக்கும் பட்சத்தில் குத்தகையை ரத்து செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பை காலி செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.