தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / headlines

காவல் துறையினர் அடித்து சித்திரவதை - ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு

தென்காசி: காவல் துறையினரால் அடித்து சித்ரவதை செய்ததாக கூறப்பட்ட ஆட்டோ ஓட்டுனர் உயிரிழந்தார்.

Police beat and torture - Auto driver's death
Police beat and torture - Auto driver's death

By

Published : Jun 28, 2020, 8:05 PM IST

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் ஹைஸ்கூல் தெருவைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணனின் மகன் குமரேசன்(25). இவர் மீது செந்தில் என்பவர் கொடுத்த இடப்பிரச்னை சம்பந்தமான புகாரின் அடிப்படையில் கடந்த மே 8ஆம் தேதியன்று காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்ற குமரேசனை உதவி ஆய்வாளர் சந்திரசேகர் கன்னத்தில் அடித்து அனுப்பிவிட்டார்.

அதேசமயம் மீண்டும் மே 10ஆம் தேதியன்று விசாரணைக்கு குமரேசனை காவல் நிலையம் வரச்சொல்லிய காரணத்தால் குமரேசனும் விகே புதூர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு வந்த குமரேசனை உதவி ஆய்வாளர் சந்திரசேகர், குமார் என்கிற காவலரும் சேர்ந்து மிக கொடூரமாக பூட்ஸ் காலால் வயிறு , முதுகு பகுதியில் மிதித்துள்ளனர். அதுமட்டுமின்றி இரு கால்களையும் நீட்டச் சொல்லி அதன் மீது இருவரும் பூட்ஸ் காலால் ஏறி நின்றும், முதுகில் கையால் மாறி மாறி குத்தியும் உள்ளனர். மேலும், லத்தியால் முதுகில் அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.

சித்ரவதை செய்தது மட்டுமின்றி, இதை வெளியில் சொல்லக்கூடாது என்றும், சொன்னால் உன் மீது பொய் வழக்கு போடுவோம். உன் அப்பாவையும் அடிப்போம் என்று மிரட்டி உள்ளனர்.

இதனால் பயந்து போன குமரேசன் சம்பவத்தை யாரிடமும் சொல்லவில்லை. கடந்த ஜூன் 10ஆம் தேதியன்று குமரேசன் ரத்த வாந்தி எடுத்துள்ளார். பின்னர் சுரண்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து ஜூன் 12ஆம் தேதியன்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து மருத்துவமனை மருத்துவர் கேட்ட பிறகுதான் குமரேசன் தனக்கு நடந்த கொடுமைகளை சொல்லியுள்ளார். அவருக்கு கல்லீரலும், கிட்னியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் குமரேசனின் தந்தையிடம் கூறியுள்ளார்.

அதன் பேரில் தென்காசி காவல் கண்காணிப்பாளரிடம் குமரேசனின் தந்தை புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் ஆய்வாளர் ஒருவரை விசாரணை செய்ய உத்தரவிட்டிருப்பதாக எஸ்பி தெரிவித்தார்.

இந்நிலையில் 16 நாள்களாக நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமரேசன் நேற்று(ஜூன் 27) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் தகவல் காட்டு தீயாக பரவவே ஏராளமான பொதுமக்கள் காவல் நிலையம் அருகே சாலை மறியலில் நேற்று (ஜூன் 27) இரவு ஈடுபட்டனர். இந்த மறியல் அதிகாலை 3 மணிவரை நீடித்தது. தென்காசி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங் தலைமையில் காவலர்கள் இந்த மறியலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

மேலும் தென்காசி, நெல்லை,குமரி மாவட்டங்களை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து இந்த பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அவரது உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். அவரது தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர், காவலர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று ( ஜூன் 28)மாலை 3.50 மணியளவில் அவரது உடல் பலத்த பாதுகாப்போடு வீ.கே.புதூர் கொண்டுவரப்பட்டது. அங்கு, உறவினர்கள் கண்ணீர் மல்க அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் அவரது உடல் பலத்த பாதுகப்போடு ஊர்வலமாக இடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details