திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் துரை, சுகாதாரத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “தமிழ்நாடு அரசு கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அர்ப்பணிப்போடு செயல்பட்டு மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் இன்னும் நான்கு நாள்களில் தூர்வாரும் பணிகள் நிறைவடைந்துவிடும். இதன் காரணமாக மேட்டூரிலிருந்து குறுவைச் சாகுபடிக்காக திறந்துவிடப்பட்ட நீர் விரைவில் மாவட்டத்திற்கு வந்துசேரும்.
டெல்டா மாவட்டத்தைப் பொறுத்தவரை குறுவைச் சாகுபடிக்குத் தேவையான விதைகள், உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட அனைத்து இடுபொருள்களும் இருப்பில் இருக்கின்றன. விவசாயிகள் இதனைத் தட்டுப்பாடின்றி பெற்றுக்கொள்ளலாம்.
திமுக தலைவர் ஸ்டாலின் போன்றோர் அரசியலுக்காக, அரசுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்துவருகின்றனர். இதுபோன்ற கருத்துக்களை மக்கள் ஏற்கமாட்டார்கள்” என்றார்.