'தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என்ற பாரதியின் சொல் இன்றளவும் உயிர்ப்புடன் உள்ளது. நவீன காலத்திலும் உலகின் மிகப்பெரிய பிரச்னையாக வறுமை இருக்கிறது. ஒருவரின் வருமானம் மட்டுமே வறுமையை கண்டறிவதற்கான குறியீடு அல்ல.
- சுகாதாரம்,
- கல்வி,
- வாழ்க்கைத் தரம்
ஆகியவற்றை வைத்தும் வறுமையின் தாக்கத்தை அறியலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்டம் குறிப்பிடுகிறது. முன்பைக் காட்டிலும் தற்போது வறுமை அதிவேகத்தில் ஒழிக்கப்பட்டுவருவதாக ஆய்வுகள் குறிப்பிட்டாலும் மிக வறுமையில் வாழ்பவர்களின் நிலை பரிதாபமாக உள்ளதால், அவர்களை மீட்பதில் அனைவருக்கும் பங்கு உண்டு என ஐக்கிய நாடுகள் சபை கருத்து தெரிவிக்கிறது.
18 வயதுக்கு மேலானவர்களைக் காட்டிலும் குழந்தைகள்தான் வறுமையால் அதிகமாகப் பாதிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தெளிவாக்குகிறது. தெற்காசியாவில் உள்ள ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளில் 25 விழுக்காட்டினர் ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இதனால், குழந்தைகள் ஐந்து வயது அடைவதற்குள்ளாகவே இறந்துவிடுகின்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் மோடி என உலகை ஆள்பவர்களில் முக்கியமான தலைவர்கள் அனைவரும் வலதுசாரி தேசியவாதிகள் ஆவர்.
வறுமையின் அடிப்படையே ஏற்றத்தாழ்வுதான்!
உலகில் வாழும் மக்கள் அனைவரும் வலதுசாரி தத்துவத்தினை கொண்டவர்களுக்கே தொடர்ந்து வாக்களித்து வெற்றி பெறவைக்கின்றனர். வலதுசாரி தத்துவத்தின் மிகப்பெரிய பிரச்னை ஏற்றத்தாழ்வை அதிகரிக்கும் என்பதுதான். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்தியாவில் நிலவும் பொருளாதார நிலை. நாட்டின் 73 விழுக்காடு செல்வத்தினை ஒரு விழுக்காடு இந்தியர்கள் மட்டுமே வைத்துள்ளார்கள் என்ற திடுக்கிடும் அறிக்கையை 'ஆக்ஸ்பம்' என்ற அமைப்பு வெளியிட்டது.
ஏற்றத்தாழ்வுக்கும் வறுமைக்கும் பெரிய வேறுபாடில்லை. வறுமையின் அடிப்படையே ஏற்றத்தாழ்வுதான். ஒரு இடத்தில் அளவுக்கு மீறி செல்வம் குவிந்தால் மற்றொரு இடத்தில் பற்றாக்குறை ஏற்படுவது இயற்கையாகும்.
வறுமை ஒழிப்பில் ஒரு அரசு எந்தளவுக்கு செயல்படமுடியும் என்பதை 'The Dravidian Years: Politics and Welfare in Tamil Nadu' என்ற புத்தகத்தில் மிக அழகாக தெளிவுபடுத்திருப்பார் அதனை எழுதிய எஸ். நாராயண். நலத்திட்டங்களை மக்களிடையே நேரடியாக சென்று சேர்ப்பதன் மூலம் வறுமையை பெரிய அளவுக்கு ஒழிக்க முடியும் என அவர் தெரிவித்திருப்பார்.
- கல்வி,
- சுகாதாரம்,
- உள்கட்டமைப்பு,
- அனைவருக்குமான வளர்ச்சி,
- ஆட்சி முறை
என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டதால்தான் வறுமை ஒழிப்பில் மிகப்பெரிய சாதனையை தமிழ்நாடு படைத்ததாக எஸ். நாராயண் சுட்டிக்காட்டுகிறார். தான் செய்யவேண்டிய கடமைகளை அரசு செய்யத் தவறினால், அதனை கேள்வி கேட்க வலிமையான ஜனநாயக தன்னாட்சி நிறுவனங்கள் தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, வறுமை ஒழிப்பில் அரசின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை இதை வைத்து அறிந்துகொள்ளலாம்.
இப்படியிருக்க அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ, மைக்கேல் கிரேமர் ஆகியோர் உலக அளவில் வறுமை ஒழிப்பிற்கான திட்டங்களை வகுத்ததால் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பலவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் வறுமையை ஒழித்துவிட முடியும் என இவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
வறுமை ஒழிப்பிற்கு கல்வியும் சுகாதாரமும் மிகவும் இன்றியமையாததை உணர்ந்த அவர்கள் அதன் தேவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர். இவர்களின் திட்டமான சுகாதாரத்திற்கு அதிக மானியம் ஒதுக்குவதில் பல நாடுகள் முனைப்பு காட்டிவருகிறது. வறுமையால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களுக்கென தனித்துவமான திட்டங்களைச் செயல்படுத்துவது மூலம் வறுமையை ஒழித்துவிட முடியும் என அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ, மைக்கேல் கிரேமர் ஆகியோர் கூறுகின்றனர். இவர்களின் மற்றொரு திட்டத்தால் 50 லட்சம் இந்திய குழந்தைகள் பள்ளிகளில் பயின்று பயனடைந்துவருகின்றனர்.
எனவே, வறுமை ஒழிப்பு என்பது ஒரு சமூகம் ஒன்றுபடாமல் நிகழ்த்தவே முடியாது. அனைவரின் பங்கும் இதில் தேவைப்படுகிறது. அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ, மைக்கேல் கிரேமர் போன்ற அறிவு ஜீவிகள் அரசுடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே வறுமை ஒழிப்பிற்கு தீர்வு காண முடியும்.