தென்காசி:சங்கரன்கோவில் காந்திநகர் 4ஆம் தெருவைச் சேர்ந்தவர், பெரியசாமி. தற்போது கக்கன் நகரில் வசித்து வரும் இவர் தனியார் கேஸ் ஏஜென்சியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முத்துமாரி (38). இவர்களுக்கு வாணீஸ்வரி, கலாராணி என்ற 2 பெண்கள். இருவரும் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.
முத்துமாரி ஆடு மேய்த்து வருகிறார். மகள்கள் பள்ளிக்குச் சென்ற பிறகு அவர் ஆடு மேய்க்கச்சென்று விடுவது அவரது வழக்கம். அதுபோலத்தான் நேற்றும் அவர் கழுகுமலை சாலையிலுள்ள குப்பைக்கிடங்கு அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாகச் சென்ற கார் அவர் மீதும் அவர் மேய்த்துக்கொண்டிருந்த ஆடுகளின் மீதும் மோதியது.
இதில் முத்துமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அது போல அவர் மேய்த்துக்கொண்டிருந்த ஆடு ஒன்றும் சம்பவ இடத்திலேயே பலியானது. மற்றொரு ஆட்டின் கால் முறிந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து முத்துமாரியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.