சென்னை:நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்துவரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவினருக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் வரும் 10ஆம் தேதியுடன் முடிய உள்ள நிலையில், மேலும் ஒரு மாதத்திற்கு கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வுசெய்யவும், அதனால் பாதிப்புகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்யும் முறை குறித்து அரசுக்குப் பரிந்துரை அளிப்பதற்காகவும் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் குழுவினர் ஒரு மாதத்திற்குள் ஆய்வுசெய்து அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் குழுவினை அமைத்து ஜூன் 10ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் குழுவின் தலைவர் ஏ.கே. ராஜன் கடந்த 12ஆம் தேதிதான் தனது பணியைத் தொடங்கினார். இந்த நிலையில், ஜூலை 10ஆம் தேதியுடன் குழுவிற்கு அளிக்கப்பட்ட ஒரு மாத கால அவகாசம் முடிய உள்ளது.