அதிமுக ஒற்றைத் தலைமையின் கீழ் செல்ல வேண்டும் எனவும் ஜெயலலிதாவால் அதிகம் அடையாளம் காணப்பட்டவரின் கீழ்தான் அதிகாரம் அனைத்தும் செல்ல வேண்டும் என எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கூறியது அக்கட்சிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவால் அதிகமுறை அடையாளம் காணப்பட்டது ஓபிஎஸ்தான்.
எனவே அவரது கரங்களுக்கு கட்சி செல்ல வேண்டுமென்று ராஜன் செல்லப்பா கூறுகிறார் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துவந்தனர். அதுமட்டுமின்றி குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரனும், “ஒரு குடும்பம் கழகத்தை வளைக்க நினைக்கக் கூடாது” எனக் கூறி ராஜனின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அப்படி ஆதரவு தெரிவித்திருந்தாலும், 'குடும்பம்' என்ற வார்த்தையை எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் பயன்படுத்தியதால் அவரது கருத்து ஓபிஎஸ் ஆதரவாளர்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், ஈபிஎஸ் ஆதரவாளர்களோ இதனை வேறுவிதமாக பார்ப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகின்றன. மத்திய அமைச்சரவையில் தனது மகனுக்கு இடம் வாங்கிவிட வேண்டும் என்று ஓபிஎஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், ஓபிஎஸ் மகனுக்கு சீட் கொடுத்ததற்கே எதிர்ப்பு தெரிவித்த சீனியர்கள் இதற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்தார்களாம். எனவே அவர்களை சமாளிக்கும் விதமாகவும், ஓபிஎஸ்க்கு செக் வைக்கும் விதமாகவும் எடப்பாடி, வைத்திலிங்கத்தை மத்திய அமைச்சரவையில் சேர்க்க பாஜகவிடம் முன்னிறுத்தினார். அதுமட்டுமின்றி டெல்லி துணை தனக்கு வேண்டுமென்றால் தனது ஆதரவாளர்தான் டெல்லியின் முகமாக இருக்க வேண்டும் எனவும் அவர் நினைத்தார். இதனால் குழம்பிப் போன பாஜக மேலிடம் இருவருக்கும் கல்தா கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஈபிஎஸ் மீது ஓபிஎஸ் மிகப்பெரும் அதிருப்தியில் இருக்கிறார். இதனை சமாளிக்கும் விதமாக ராஜன் செல்லப்பாவைவிட்டு தனது குரலை எடப்பாடி ஒலிக்கவிட்டிருக்கிறார். ராஜன் செல்லப்பா பேசியது, ஓபிஎஸ்க்கு ஆதரவாக தெரிந்தாலும், அங்குதான் 'எடப்பாடியின் ராஜதந்திரம்' அடங்கியிருக்கிறது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
இது இப்படி இருக்க ஓபிஎஸ் மீண்டும் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்திருப்பதால், 'பொதுச் செயலாளர்' பதவியை ஈபிஎஸ் அடைவதற்கு மறைமுக ஸ்கெட்ச் நடந்து கொண்டிருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகிறது.
விரைவில் பொதுக்குழுவைக் கூட்டி பொதுச்செயலாளர் பதவியை அடைந்துவிட்டால் ஓபிஎஸ் தர்மயுத்தம் ’2.0’ ஆரம்பித்தாலும் அதற்கு எந்தவித வீரியமும் இருக்காது. இதனைக் கருத்தில் கொண்டுதான் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இருந்த அதிருப்தியை அறிந்துகொண்டும் அக்கட்சியுடன் ஈபிஎஸ் கூட்டணி வைத்தார். தற்போது அவர் நினைத்தது போலவே மத்தியில் தாமரை பிரகாசமாக மலர்ந்திருக்கிறது. எனவே நிச்சயம் இரட்டை இலையை தாமரை தாங்கும். அதனால் தைரியமாக பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றலாம் என ஈபிஎஸ் நினைக்கிறார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே, ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன் நேற்று நள்ளிரவு முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பின்போது என்ன விவகாரம் பேசப்பட்டது என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், தேனியில் சீட் கேட்கும் முன்பே ஓபிஎஸ் மதுரையில்தான் தனது மகனுக்கு சீட் கேட்டார். அதற்கு ராஜன் செல்லப்பா பெரிய தடையாக இருந்தார் என்று வெளியான தகவல் கவனிக்கத்தக்கது.
'மதுரையில் ஓபிஎஸ் மகனை போட்டியிட விட்டால் அவரது கரங்கள் மதுரையில் வலுப்பெற்று தனது கரங்களை பலவீனப்படுத்தும் என ராஜன் நினைத்ததார் அதனால் தனது மகனுக்கு பலத்த போட்டியிடையே சீட் வாங்கிவிட்டார். ஆனாலும் மதுரையில் சத்யனால் வெற்றிபெற முடியவில்லை. இருப்பினும் ஓபிஎஸ்ஸை மீறி தனது மகனுக்கு சீட் கொடுத்த ஈபிஎஸ்ஸுக்கு இனி விசுவாசமாக இருப்பது என அவர் முடிவு செய்துவிட்டார். தற்போதைய சூழலில் ராஜன் செல்லப்பா ஈபிஎஸ்ஸை சென்று சந்தித்தால் விவகாரம் வேறு திசையில் பயணித்துவிடும். எனவேதான் தனக்கு பதிலாக தனது மகனை அவர் அனுப்பிவைத்தார்' மதுரை மாவட்ட அதிமுகவினரின் எண்ணமாக இருக்கிறது.