தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / headlines

'இறையுணர்வுக்கு எதிரானது பாஜகவின் தேர்தல் வாக்குறுதி' - கே.பாலகிருஷ்ணன் - tamil nadu assembly election

இறையுணர்வைப் பயன்படுத்தி பாஜக முன் வைக்கும் தேர்தல் வாக்குறுதிகள், பொதுமக்களின் இறையுணர்வுகளுக்கு எதிராகத்தான் அமையும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

cpim secretary
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் சிறப்பு பேட்டி

By

Published : Mar 24, 2021, 9:01 AM IST

Updated : Mar 24, 2021, 2:26 PM IST

சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்காக மதுரை வந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஈடிவி பாரத்திற்கு பிரத்யேகப் பேட்டியளித்தார். எதிர் வரும் தேர்தல் குறித்து அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு:

அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு?

’தமிழ்நாடு முழுவதும் அதிமுக-பாஜகவுக்கு எதிரான மனநிலையே பொதுமக்களிடம் காணப்படுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில், பொதுமக்கள் அவர்களை புறக்கணிக்கின்ற செய்திகளை நாம் காணமுடிகிறது. துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தைக்கூட அவரது சொந்த தொகுதியில் பொதுமக்கள் அனுமதிக்க மறுக்கிறார்கள். ஆளும் கட்சி எம்எல்ஏக்களாக இருந்த பலர், தொகுதி மாறி போட்டியிடுவதற்கும் இதுதான் காரணம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியைக்கூட அதிமுக கூட்டணி பெறுவதற்கு வாய்ப்பில்லை.

பாஜகவின் தேர்தல் அறிக்கையினால் ஏற்படும் தாக்கம்?

ஒவ்வொரு கட்சியும் தங்களது தேர்தல் அறிக்கையில் தங்களது கொள்கை சார்ந்த விஷயங்களை மையப்படுத்தி வெளியிடுவது இயல்பே. ஆனால், பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் உள்ள பண்பாடு, ஆன்மிகம் சார்ந்த விஷயங்கள் தமிழ்நாட்டில் வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் கவலையாக இருக்கிறது.

முந்தைய காலத்தில் அரசர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஆன்மிகத் தலங்கள் அனைத்தும் இந்திய நாட்டின் விடுதலைக்குப் பிறகு இந்து சமய அறநிலைத்துறை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் மடாதிபதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஆன்மிகத் தலங்களை இதன் கீழ் கொண்டு வர முடியவில்லை. அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட இந்து கோயில்கள் அனைத்திற்கும் அவற்றின் சடங்குகள் வழிபாட்டு முறைகளுக்கு மதிப்பளித்து இன்று வரை அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை தனியாகப் பிரித்து செயல்படுத்துவது பாஜகவின் நோக்கமாக இருக்கிறது. இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது கவலையை ஏற்படுத்துகிறது.

தனியார்மயமாகிறதா இந்துக்கோயில்கள்?

வங்கிகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியார்மயமாக்கிக் கொண்டிருக்கின்ற மத்திய பாஜக அரசு, இந்து அறநிலையத்துறையின்கீழ் இருக்கக்கூடிய கோயில்களையும் தனியார்மயமாக்க நினைக்கிறது. அவர்களின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுகின்ற ஆன்றோர், சான்றோர் என்பவர்கள் யார்? இதற்கு என்ன அளவுகோல் இருக்கிறது? இந்தப் போக்கு எதில் கொண்டு போய் முடியும் என்பதை மிகக் கவலையுடன் பார்க்க வேண்டியுள்ளது.

வழிப்பாட்டு உரிமைகளுக்கு எதிரான செயலா?

பொதுமக்களின் வழிபாட்டு உரிமைக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்பதிலும், கோயில்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும் எங்களுக்கு மாற்றுக் கருத்தே இல்லை. வழிபாட்டுத் தலங்களாக இருந்தாலும்கூட மிகப்பெரிய வரலாற்று ஆவணங்களாகவும், கலைப் பொக்கிஷங்களாகவும் கோயில்கள் திகழ்கின்றன.

பல்லாயிரக்கணக்கான கோடிகள் மதிப்புள்ள இக்கோயில்களை தனியார் நிர்வகிக்க அனுமதித்தால் அதன் எதிர்காலம் என்ன ஆகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். கோயில்களின் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்டுள்ள மூன்றாயிரம் கோடி ரூபாய் வைப்புநிதி என்னவாகும் என்ற கேள்வியும் எழுகிறது. பொதுமக்களின் இறையுணர்வை பயன்படுத்தி இவர்கள் வைக்கின்ற தேர்தல் வாக்குறுதி, அந்தப் பொதுமக்கள் இறையுணர்வுகளுக்கே எதிராகத்தான் அமையும்.

இது மக்களின் வழிப்பாட்டு உரிமைகளுக்கு எதிரான செயல். ஆகையால் ஒரு கட்டத்திற்கு பிறகு யார் யாரெல்லாம் வழிபட வரவேண்டும் என்ற நிலையும் ஏற்படும். திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில்கூட கோயில்கள் குறித்தும், வழிபாட்டு உரிமைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளன.

திருப்பரங்குன்றம் தொகுதியில்கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வாய்ப்பு?

பொதுவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற தொகுதிகளில் நேர்மையாகவும், மக்களின் உரிமைகளுக்கு பாதுகாவலர்களாகவுமே உள்ளனர். அந்தந்த தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் முன் இருப்பவர்களாக உள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பிரத்யேக நேர்காணல்

தொகுதி மக்களின் அடிப்படை உரிமைகளை காப்பதற்காக நாங்கள் அயராது பாடுபடுவோம். இதுபோன்ற எடுத்துக்காட்டுகளுடன் எங்களது சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலர் இருந்துள்ளனர். மதுரையைப் பொருத்தவரை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நன்மாறன் இதற்கு மிகச் சிறந்த உதாரணம். அது போன்றே மதுரை, திருப்பரங்குன்றம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் பொன்னுத்தாய், தொகுதி மக்களின் உரிமைகளுக்காக செயல்படுவார்.

தமிழ்நாட்டில் மிகப்பெரிய பண பலம் படைத்த 100 பேரைத் தேர்வு செய்தால், அதில் ஒருவராக திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா இருப்பார். கடந்த இரண்டு முறை போட்டியிட்டு வென்ற மதுரை, வடக்கு தொகுதியிலிருந்து திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இந்த முறை ராஜன் செல்லப்பா மாறியதற்குக் காரணம் தோல்வி பயம் தான். அவர் தொகுதி மாறியதே தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொண்டதற்கு சமம். ஆகையால் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி மக்கள் இதைக் கண்டு ஏமாற மாட்டார்கள் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம், நாங்கள் வெல்வோம்” எனப் பேசி முடித்தார்.

இதையும் படிங்க:'சொந்த தொகுதியையே ஏமாற்றும் எடப்பாடி பழனிசாமி' - ஸ்டாலின்

Last Updated : Mar 24, 2021, 2:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details