சென்னை: சென்னையில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் முழுமையாக நீங்காத நிலையில், கரோனா பரிசோதனை மையம், கரோனா பாதுகாப்பு மையங்கள் எண்ணிக்கையை மாநகராட்சி நிர்வாகம் குறைத்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மே மாதத்தில் உச்சத்தில் இருந்த கரோனா பரவல், படிப்படியாகக் குறைந்துவருகிறது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி உள்பட்ட இடங்களில் கரோனா பரிசோதனை மையங்கள், கரோனா பாதுகாப்பு மையங்களை மாநகராட்சி தற்காலிகமாக மூடிவருகிறது. லேசான கரோனா அறிகுறி உள்ளவர்கள் தங்கி சிகிச்சைப் பெற்றுவந்த 32 கரோனா பாதுகாப்பு மையங்களில் 14 மையங்கள் மூடப்பட்டுள்ளன.
கரோனா உறுதியான பின் நோயின் தீவிரம் குறித்து பரிசோதனை செய்துவந்த 15 கரோனா சிறப்பு பரிசோதனை மையங்களில் 9 பரிசோதனை மையங்களையும் சென்னை மாநகராட்சி மூடியுள்ளது.
மேலும் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று அறிகுறிகள் உள்ளதா எனத் தினந்தோறும் வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ளும் களப்பணியாளர்கள் எண்ணிக்கையையும் 12 ஆயிரத்தில் இருந்து 6,300ஆக மாநகராட்சி குறைத்துள்ளது.