கோயம்புத்தூர்: காளப்பட்டி பகுதியிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கணினி ஆய்வகத்தை அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்துவைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளருக்குப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், "கோயம்புத்தூர் தனியார் பள்ளியில் நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பந்தமாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணைக்காகச் சென்றபோது, பள்ளி நிர்வாகம் மழுப்பலான பதில் அளித்தது. பின்னர், காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சம்பந்தபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளபட்டது.
குற்றம் செய்பவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். இது போன்ற பாலியல் சீண்டல் புகார் தொடர்பாக அனைத்து கல்வி நிலையங்களிலும் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அது தொடர்பாக மாணவர்களுக்கு அதிகப்படியான விழிப்புணர்வு இல்லை.
பள்ளிகள் முழுமையாகத் திறந்த பிறகு, அது தொடர்பான விழிப்புணர்வுகள் மாணவர்களுக்கு ஏற்படுத்தப்படும். பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக மாணவர்கள் புகார் தெரிவிக்க, ஒரு பெண் ஆசிரியர் தலைமையில் மேலாண்மைக் குழு ஒன்று அமைக்கப்படும்.
நவம்பர் 19ஆம் தேதிக்குப் பிறகு, அதுபோன்ற அறிவிப்புகள் பள்ளிக் கல்வித் துறை சார்பாக வெளியிடப்பட்டு, முறையாக மாணவர்களுக்கு புகார் தெரிவிப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
பல்வேறு இடங்களில் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது, உடனடியாக கட்டணம் கட்ட வேண்டும் என்பது தொடர்பாக புகார்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்தக் கல்வி நிறுவனங்கள் மீது எச்சரிக்கைவிடுப்பது மட்டுமல்லாமல், அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது" என்று கூறினார்.
இதையும் படிங்க:நாட்டின் முதல் ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் ரயில் நிலையத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி