இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இறுதிப் பருவம் தவிர்த்து மீதமுள்ள அனைத்து பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும், அத்தேர்வுகளை எழுதவிருந்த அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்படுவதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 23ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், அதில் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். குறிப்பாக, நடப்புப் பருவத் தேர்வுகளுக்கான அனைத்துக் கல்லூரிகளும் வசூலித்துள்ள தேர்வுக் கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வரும் 7ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இறுதிப் பருவம் தவிர்த்து மீதமுள்ள அனைத்து பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான கட்டணத்தை வசூலிப்பதில் அண்ணா பல்கலைக்கழகம் அதீத ஆர்வம் காட்டுவது நியாயமல்ல; அது வணிக நோக்கத்தையே காட்டுகிறது. அண்ணா பல்கலைக்கழகம், அதனுடன் இணைக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இளநிலை பொறியியல் படிக்கும் மாணவர்களிடமிருந்து ரூ.1200 முதல் ரூ.1750 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.