தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / headlines

அதிமுக பதவி நியமனங்களுக்கு தடை: ஈபிஎஸ், ஓபிஎஸ் பதிலளிக்க உத்தரவு - AIADMK secretary

சென்னை: அதிமுகவில் புதிய பதவி நியமனங்களுக்கு தடை விதிக்க கோரிய வழக்கில், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

AIADMK  new designation stop petition
AIADMK new designation stop petition

By

Published : May 8, 2021, 12:19 PM IST

Updated : May 8, 2021, 8:56 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூரியமூர்த்தி என்பவர் சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவர், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சூழலில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கினர். ஆனால், அதிமுகவின் விதிகளின்படி, பொதுச் செயலாளர் பதவியை நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.

சசிகலா நீக்கப்பட்டது கட்சி விதிளுக்கும், மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கும் முரணானது. அத்துடன் தற்போதுள்ள இரட்டை தலைமையை கட்சி உறுப்பினர்கள் யாரும் விரும்பவில்லை.

2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட உட்கட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. அதனால், உட்கட்சி தேர்தலை நடத்த அதிமுக உத்தரவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மனு அளித்தேன்.

அந்த விசாரணையில், தேர்தல் ஆணையத்திற்கு பதில் அளித்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் விரைவில் தேர்தலை நடத்துவதாக உறுதியளித்தனர். ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும் தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே கட்சியின் விதிகளுக்கு முரணான புதிய விதிகளுக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்.

பழைய விதிகளின்படி மட்டுமே கட்சி செயல்பட உத்தரவிட வேண்டும். குறிப்பாக கட்சியில் புதிய நியமனங்கள் மேற்கொள்வதற்கு அவைத் தலைவர், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நகர உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகள், இந்த மனு குறித்து, அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோர் வரும் ஜூலை 7ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க:முன்னாள் எம்எல்ஏ அப்பாவு மனு - மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

Last Updated : May 8, 2021, 8:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details