சென்னை: விஜயராஜ் என்ற விஜயகாந்த், இனிக்கும் இனிமை படத்தின் மூலம் அறிமுகமாகி அகல் விளக்கு, சாமந்திப்பூ, தூரத்து இடி முழக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 1981-இல் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை என்ற படம்தான் விஜயகாந்தை மக்களிடம் முதல் முதலாக கொண்டு சேர்த்தது.
ரஜினி, கமலைத் தாண்டி மோகன், கார்த்தி, ராமராஜன், சத்யராஜ், பிரபு போன்றோரும் கொடிகட்டி பறந்த நேரம் அது. ஏராளமான வசூல் சக்கரவர்த்திகள் உலவிய அந்த 80-ஸ் காலகட்டத்தில் கருப்பு நிறத்தில் ஒருவர் நாயகனாக நடிக்க வருகிறார்.
பின்னாளில் பாமர மக்களின் கலைஞனாக அவதாரம் எடுத்,து விஸ்வரூபம் காட்டியவர் புரட்சிக்கலைஞர் என்று சினிமா பட்டம் பெற்றவர், விஜயகாந்த்.
சட்டம் ஒரு இருட்டறை படத்திற்குப் பிறகு பி அண்ட் சி ஏரியாக்களில் அவருடைய படங்கள் வசூலை ஈட்டத் தொடங்கின. தான் நடித்து வந்த காலத்தில், தமிழ் சினிமாவில் யானையாகவே வலம் வந்தார். படம் எப்படியாவது குறிப்பிட்ட அளவில் வசூலித்துவிடும். தயாரிப்பாளர்கள் நஷ்டமடைய மாட்டார்கள். சாட்சி போன்ற படங்களால், அடித்தட்டு மக்களை ஆக்சன் காட்சிகள் மூலம் தன் வசப்படுத்திய விஜயகாந்த், கடுமையாக போராடி முன்னணி நடிகர்களுக்கு இணையாக 80-களின் மத்தியில் மாஸ் கமர்சியல் ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்தார்.
நடிக்க வந்த சில ஆண்டுகளில் கிராமப்புறத்து கதாநாயகனாக நடித்து வெற்றிகளைக் குவித்தவர் விஜயகாந்த். வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே போன்ற படங்கள் எல்லாம் இந்த ரகம்தான். திரைப்படக் கல்லூரி மாணவர்களை வைத்து போலீஸ் அதிகாரியாக அவதாரமெடுத்த ஊமை விழிகள் படம், விஜயகாந்த்தை வேறு தளத்திற்கு கொண்டு சென்றது. அதன் பிறகு காவல்துறை அதிகாரி வேடம், புலனாய்வு, பாகிஸ்தான் தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடுவது என பின்னியெடுத்தார். புலன்விசாரணை, ஆனஸ்ட்ராஜ், சேதுபதி ஐபிஎஸ், மாநகர காவல் என பட்டியல் நீண்டது.
கதாநாயகனாக ஒரே ஆண்டில் 18 படங்கள் வெளியாகி சாதனை படைத்தார். இவரால் அறிமுகப்படுத்தப்பட்டு, வாய்ப்பு வழங்கப்பட்டு பின்னாளில் புகழின் உச்சியை எட்டிய நடிகர், நடிகை, இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியல் மிகப்பெரியது. தன் திரை வாழ்வில் இதுவரை 50க்கும் மேற்பட்ட உதவி இயக்குநர்களை இயக்குநர்களாக அறிமுகப்படுத்தி அழகுபார்த்தவர், விஜயகாந்த்.
சட்டம் ஒரு இருட்டறை படத்துக்குப் பிறகு வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன்பிறகு நானே ராஜா நானே மந்திரி, கரிமேடு கருவாயன், அம்மன் கோயில் கிழக்காலே போன்ற படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.
திரைப்படக் கல்லூரி மாணவர்களை வைத்து இவர் நடித்த ஊமை விழிகள் திரைப்படம் சரித்திரம் படைத்தது. யாருமே திரைப்பட கல்லூரி மாணவர்களை நம்பி படம் எடுக்க முன் வராத நிலையில், அவர்களின் திறமையின் மீது நம்பிக்கை வைத்து, வாய்ப்பு வழங்கினார், விஜயகாந்த். படமும் மிகப்பெரிய புகழைப் பெற்றிருந்தது.