சென்னை: தமிழ் திரையுலகில் பல சோதனைகளைக் கண்டு சாதனை புரிந்த மனிதர்களில் ஒருவர், நடிகர் விஜயகாந்த். கலை மீது கொண்ட பற்றாலும், உதவும் குணத்தாலும் அனைவராலும் போற்றப்பட்ட மனிதர், உடல் நலக்குறைவால் அவரது 71 வயதில் நேற்று காலமானார். அவர் மறைந்தாலும், அவர் செய்த தொண்டுகள் என்றும் நிலைத்திருப்பதற்கு உதாரணமாக, அவரின் இறுதி ஊர்வலத்தில் குவிந்த மக்களே சாட்சியாக இருக்கின்றனர்.
1952ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த விஜயராஜ், தனது இளமை காலத்தில் எம்.ஜி.ஆரின் படங்களைப் பார்த்து சினிமாவில் நடித்தே தீர வேண்டும் என்ற ஆசையை வளர்த்துக் கொண்டார். சினிமாவைப் பிடிக்கும் என்ற பின்புலத்தை தவிர எதுவும் இல்லாமல் தமிழ் திரையுலகில் நுழைந்தார். இனிக்கும் இளமை படத்தின் மூலம் விஜயராஜாக இருந்த இவரை, விஜயகாந்தாக அறிமுகம் செய்தவர் இயக்குநர் எம்.ஏ காஜா.
ஒரே வருடத்தில் 18 படங்கள்:தமிழ் சினிமாவில் 1979ஆம் ஆண்டில் 'இனிக்கும் இளமை', 'தூரத்து இடி முழக்கம்', 'அகல் விளக்கு' என்ற படங்கள் மூலம் களமிறங்கினார், விஜயகாந்த். 1981ஆம் ஆண்டு நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ சந்திரசேகரின் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து வெளியான 'சட்டம் ஒரு இருட்டறை' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த கால தயாரிப்பாளர்கள் விஜயகாந்தின் கால்ஷீட்டுக்காக குவியத் தொடங்கிய காலமாகவும் அது அமைந்தது.