சென்னை:குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘மகாராஜா’ படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா இன்று (செப்.10) சென்னையில் நடைபெற்றது. இந்த படம் விஜய் சேதுபதி நடிக்கும் 50வது படமாகும். இப்படத்தில் அனுராக் காஷ்யப், நட்டி, மம்தா மோகன்தாஸ், அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இயக்குநர் நித்திலன் சாமிநாதன் நிகழ்வில் பேசுகையில், ‘விருமாண்டியில் இருந்து அபிராமியின் தீவிர ரசிகன் நான். இந்த படத்தில் அவருடைய நடிப்பு அற்புதமாக இருந்தது. இன்று அனுராக் காஷ்யப்புக்கு பிறந்தநாள். ஒரு காட்சி தயார் செய்யும்போது அது கவரும் விதமாக இருந்தது. அவர் லெஜண்ட். இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு நன்றி” என்றார்.
மேலும், “நான் முன்பில் இருந்தே விஜய் சேதுபதியுடன் வேலை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அவருடைய 50வது படம் எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி. அவர் நடிகரை விட நல்ல மனிதர். இவருடைய வேலையில் நான் குறை பார்த்ததே இல்லை. இப்படியா ஒரு மனிதர் நடிப்பார் என்று ஆச்சரியமாக இருந்தது” என்றார்.
இதனையடுத்து பேசிய விஜய் சேதுபதி, ‘இந்த படத்தில் நன்றாகவே சம்பவம் வைத்துள்ளார் நித்திலன். 50வது படம் என்பது வாழ்க்கையில் கொஞ்சம் கூட கற்பனை செய்து பார்க்கவில்லை. இந்த எண்கள் எல்லாம் மைல்கல் போன்றது. இது ஒரு நல்ல அனுபவம். என் வாழ்க்கை கோலத்தில் எந்தப் புள்ளியில் ஆரம்பித்தது என்று தெரியாது.
முக்கியமான புள்ளியைப் போட்டு என் வாழ்க்கையின் கோலத்தை தொடங்கி வைத்தவர் நடிகர் அருள் தாஸ். நட்டியின் கதாபாத்திரம் இன்னொரு ஹீரோதான். படக்குழுவுக்கு நன்றி. அபிராமி, மம்தா இருவரும் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள். விருமாண்டியில் இருந்து அபிராமியின் ரசிகன். உன்னை விட, ரெட் ஆப்பிள் கண்ணத்தோடு உள்ளிட்ட பாடல்கள் ரொம்ப பிடிக்கும்.
மகாராஜா டைட்டிலுக்கு மிகவும் சந்தோசப்படுகிறேன். கண்டிப்பாக இது பேசும் படமாக அமையும். கண்டிப்பாக 2 முதல் 3 மடங்கு இந்த படம் சம்பாதித்து தரும். நான் முதன் முதலில் இந்தியில் அனுராக் காஷ்யப் தயாரிப்பில்தான் நடிக்க வேண்டி இருந்தது. அது நடக்கவில்லை. ஆனால், இந்த படத்தில் அவருடன் நடித்துள்ளேன்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:கூடங்குளம்; மிதவைக் கப்பலை மீட்பதில் மீண்டும் பின்னடைவு!